யாருக்கு கால்ஷீட்? - அஜித்தை விமர்சித்த கே.ராஜன்

யாருக்கு கால்ஷீட்? - அஜித்தை விமர்சித்த கே.ராஜன்
Updated on
1 min read

போனி கபூருக்கு கால்ஷீட் கொடுத்திருப்பது தொடர்பாக அஜித்தை விமர்சித்துள்ளார் தயாரிப்பாளர் கே.ராஜன்.

கமல் கோவின்ராஜ் தயாரித்து, நாயகனாக நடித்துள்ள படம் 'புறநகர்'. இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் மின்னல் முருகன். முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்துக்கு இந்திரஜித் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 29) சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ், தருண் கோபி, கே.ராஜன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கே.ராஜன் பேசியதாவது:

"தமிழ் சினிமா ரசிகர்கள் யார் பின்னாடியாவது போய்க் கொண்டிருப்பார்கள். 1000 ரூபாய்க்கு டிக்கெட் விற்றாலும் அப்பா-அம்மாவைப் பார்க்காமல் படம் பார்ப்பார்கள். பால் இல்லாமல் அழும் குழந்தையை விட்டுவிட்டு, இங்கு கட் அவுட்டுக்கு பால் ஊற்றிக் கொண்டிருப்பார்கள். அப்படிச் செய்ய வேண்டாம், இறுதியில் பால் ஊற்றவே ஆளில்லாமல் போய்விடும்.

சினிமாவையே அரசியலாக்கிக் கொண்டிருக்கிறோம். பின்பு அரசாங்கத்திடம் மன்னிப்புக் கேட்போம். இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. 50-60 கோடி ரூபாய் செலவு பண்ணி படம் எடுத்துவிடுகிறோம். அந்தப் படத்தை மக்கள் பார்த்து அதிலிருந்து பணம் வரும். இதுதான் 500-1000 ருபாய்க்கு டிக்கெட் விற்கக் காரணம். ரசிகனைப் பற்றியே நினைக்காத நடிகர்களுக்கு ஏன் பால் அபிஷேகம் பண்ணுகிறீர்கள்?

அனைவரும் தர்மம் பண்ணுங்கள். எம்.ஜி.ஆர் அனைவருக்கும் கொடுத்துக் கொடுத்துதான் பொன்மனச் செம்மல் என்று பெயரெடுத்தார். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்குங்கள், பாதிப் பணத்தை ஏழை மக்களுக்குக் கொடுங்கள். அவர்கள் உங்களை இதயத்தில் ஏந்திக் கொள்வார்கள். நான் யாரையும் குறை சொல்லவில்லை.

ரஜினி பெங்களூருவில் இங்கு வந்து எந்தப் படத்தில் நடித்தார். சின்ன படம்தான் வெற்றியடைந்து பெரிய படமாகிறது. அஜித் சார் நல்ல மனிதர். அவரை சோழா பொன்னுரங்கம் என்ற தயாரிப்பாளர்தான் ஹீரோ ஆக்கினார். அப்போது அஜித் படிப்படியாகக் கஷ்டப்பட்டு மேலே ஏறினார். இப்போது சோழா பொன்னுரங்கம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூருக்கு அஜித் 2 படங்கள் கொடுத்திருக்கிறார். போனி கபூருக்கு ரூ.15 கோடி என்பது ரூ.50 கோடியாகப் போய்ச் சேரும்.

அனைத்து நடிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள் தான். நீங்கள் யார் என்று தெரியாமல் இருக்கும்போது, உங்களை ஹீரோவாகப் போட்டு படம் எடுத்தவர்களுக்கு கால்ஷீட் கொடுங்கள். ஒருவர் மட்டும் அல்லாமல் உங்களது முதல் 5 படத்தைத் தயாரித்த தயாரிப்பாளரை ஒன்றுசேர்த்து 1 படம் கொடுங்கள். அப்படி ரஜினி சார் செய்த படம் 'பாண்டியன்'. அதில் வந்த லாபத்தைப் பிரித்து அனைவரும் பலன் அடைந்தார்கள். அப்படி அனைவரும் புண்ணியத்தைத் தேடிக் கொள்ளுங்கள்".

இவ்வாறு தயாரிப்பாளர் கே.ராஜன் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in