

‘ஒன்றே குலம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய என்.கிருஷ்ணசாமி, சென்னையில் நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 95.
திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், சின்னத்திரை இயக்குநர், ‘கும்பகோணம் டைம்ஸ்’ பத்திரிகை ஆசிரியர் என பன்முகம் கொண்ட இயக்குநர் என்.கிருஷ்ணசாமி தமிழ் திரைப்படத் துறையில் முதன்முதலாக சினி டெக்னீஷியன் அசோஷியேஷன்ஸ் தொடங்க காரணமாக இருந்தவர். இவர் வடஇந்திய நடிகர்களையும், தென்னிந்திய நடிகர்களையும் ஒன்றிணைத்து முதல் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்தினார். சென்னையில் முதல் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவதில் பெரும் பங்காற்றினார்.
இவர் முதலில் இயக்கிய ‘ஒன்றே குலம்’ திரைப்படத்துக்கு அப்போதைய முதல்வர் காமராசர் தலைப்பு வைத்துள்ளார்.அவர் மீது கொண்ட அன்பு காரணமாக, தனது தயாரிப்பில் சிவாஜிகணேசன் நடித்த படத்துக்கு ‘படிக்காத மேதை’ என பெயரிட்டார்.
திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவு துறையில் பட்டம் பெற்ற என்.கிருஷ்ணசாமி ‘சந்திரலேகா’ படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.
மேலும், ‘மேல் மாடி காலி’, ‘சினிமா சினிமா’, ‘கர்நாடக இசை மாமேதைகள்’, ‘சுதந்திர போரில் தமிழ் சினிமா’ உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் இயக்கியவர். ‘மேல் மாடி காலி’தொடரில் நடிகர் விவேக்கைசின்னத்திரையில் அறிமுகப்படுத்தினார்.
கும்பகோணம் அருகே உள்ளபாபநாசத்தை பூர்வீகமாகக்கொண்ட என்.கிருஷ்ணசாமி சென்னை கே.கே.நகரில் வசித்துவந்தார். அவரது மனைவி ஜெயலட்சுமி கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இவர்களுக்கு பாலசந்தர், சுரேஷ் என்ற மகன்களும், அனு என்ற மகளும் உள்ளனர்.
இன்று காலை 10.30 மணிஅளவில் நெசப்பாக்கம் மயானத்தில் இறுதி சடங்குகள் நடக்கிறது.