

மணிரத்னம் இயக்கி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு இறுதியில் வெளிவர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து, அடுத்தகட்ட படப்பிடிப்புக்குத் தயாராகி வருகிறது படக்குழு.
இரண்டு பாகமாக உருவாகும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ரியாஸ் கான் உள்ளிட்டோரின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், சரத்குமார் உள்ளிட்டோரின் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.
இதனிடையே இந்தப் படத்தின் முதல் பாகத்தை இந்தாண்டு இறுதியில் வெளியிட மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்புகள் திட்டமிட்டபடி எவ்விதப் பிரச்சினையுமின்றி முடிந்து, கிராபிக்ஸ் பணிகளும் நினைத்தது மாதிரி அமைந்துவிட்டால் முதல் பாகத்தை இந்தாண்டு இறுதியில் வெளியிடலாம் என்ற ஆலோசனை நடைபெற்றுள்ளது.
மேலும், இந்தாண்டு முதல் பாகத்தை வெளியிட்டால் தான் அடுத்தாண்டு அடுத்த பாகத்தை வெளியிடச் சரியாக இருக்கும் எனவும் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவை அனைத்துமே சரியாக நடப்பதற்கு, படப்பிடிப்பு, கிராபிக்ஸ் உள்ளிட்டவை அனைத்துமே திட்டமிடப்படி முடிய வேண்டும் என்பது நினைவு கூரத்தக்கது.
ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துவரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். லைகா நிறுவனம் வழங்க முதல் பிரதி அடிப்படையில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.