

இளையராஜாவால் இந்த தலைமுறைக்கு ஏற்ப இசையை வழங்க முடியாதா? என்று 'ஞானச்செருக்கு' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொல்.திருமாவளவன் பேசினார்
தரணி ராசேந்திரன் இயக்கத்தில் மறைந்த ஓவியர் வீரசந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஞானச்செருக்கு'. பாணியின் தன்னாட்சி குடில் படைப்பு மற்றும் பார்ச்சூன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 28) சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், வ.கௌதமன், சுப்பிரமணிய சிவா, அஜயன் பாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் தொல். திருமாவளவன் பேசும் போது, "இந்த படத்தை நான் பார்த்துவிட்டேன். 'ஞானச்செருக்கு' என்கிற பெயரை இன்னும் சாதாரண தமிழில் சொன்னால் அறிவுத்திமிர் என்று சொல்லலாம். தந்தை-மகன், ஆசிரியர்-மாணவன், தலைவர்-தொண்டன் என ஒவ்வொரு துறையிலும் தலைமுறை இடைவெளி இருப்பது போல சினிமாவிலும் இருக்கிறது.
இங்கே வாழ்த்த வந்திருக்கும் மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கும் இந்த படத்தை இயக்கியிருக்கும் தரணி ராஜேந்திரனுக்கும் இருக்கும் இடைவெளி கூட தலைமுறை இடைவெளிதான். இதைத்தான் இந்தப்படத்தில் கருப்பொருளாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் தரணி ராஜேந்திரன். காதல், டூயட், குத்துப்பாட்டு, சண்டைக்காட்சி என எந்தவித வணிக நோக்கமும் இல்லாமல் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
கதையின் கருப்பொருளே ஓவியர் வீர சந்தானம் தான். ஓவியர் வீர சந்தானத்துடன் போராட்டக் களங்களில் நான் கைகோர்த்து நின்றவன்.. என்னுடைய புத்தகங்களுக்கு அவரது ஓவியங்களை வழங்கி அலங்கரித்திருக்கிறார். மிகச்சிறந்த ஈழ உணர்வாளர். தரணி ராஜேந்திரன் யாரும் உணர முடியாததை உணர்ந்திருக்கிறார். யாரும் தொடமுடியாத ஒரு விஷயத்தைத் தொட்டிருக்கிறார். யாரும் விவரிக்க முடியாத ஒரு விஷயத்தை விவரித்திருக்கிறார். இதுவே அவருக்கு உள்ள ஞான வலிமையைக் காட்டுகிறது.
இன்றைய தலைமுறையினர் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை 50 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த நம்மைப் போன்றவர்களால் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சிந்திக்க முடியாது. அப்படியே தெரிந்தாலும் புரிந்தாலும் அவர்களுக்கு ஏற்ப இணங்க முடியாது இது ஒரு உளவியல் சிக்கல். இதுதான் தலைமுறை இடைவெளி என்பது. இசைஞானி இளையராஜாவின் இசையை 25 ஆண்டுகளுக்கு மேலாக உலகமே கொண்டாடிக் கொண்டிருந்தபோது ஏ.ஆர் ரஹ்மான் என்பவர் வந்தார்.
உலகம் ரஹ்மானைச் சுற்றிக் கொண்டது ஏன் இளையராஜாவால் இந்த தலைமுறைக்கு ஏற்ப இசையை வழங்க முடியாதா..?. அது அவருக்குத் தெரியாதா என்கிற கேள்வி எழும். ஆனால் அதற்கு விடை சொல்ல முடியாது. அதேபோலத்தான் இங்கே இருக்கிறார் இயக்குநர் எஸ்பி.முத்துராமன். அவரால் இது போன்ற படத்தை இயக்க முடியாதா என்றால் அந்த கேள்விக்கு விடை தெரியாது. இந்த படத்தின் நாயகனும் இதுபோன்ற ஒரு தலைமுறை இடைவெளியில் சிக்கிக்கொண்டவர் தான். அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் கதை.
இந்த படத்தைப் பார்த்த பாரதிராஜா நான் எடுக்க வேண்டிய படத்தை எடுத்திருக்கிறாய் என இயக்குநரைப் பாராட்டியதாகச் சொன்னார்கள். அது தான் இந்த படத்தின் வெற்றி, இந்த முப்பது வயது இளைஞர், பாரதிராஜா, எஸ்பி முத்துராமன் போன்ற முதுபெரும் இயக்குநர்களின் சிந்தனைக்கு மாறி அவர்கள் நிலையிலிருந்து சிந்தித்து இந்த படத்தை எடுத்திருக்கிறார். மிகச்சிறந்த படைப்பாளிக்கு வெற்றி தோல்வி ஒரு பொருட்டே அல்ல.
சில படங்களைப் பார்க்கும்போது இந்த படத்தில் ஒன்றுமே இல்லை இதெல்லாம் எப்படி ஓடுகிறது என கேள்வி எழும். ரஜினிகாந்த் சினிமாவில் நுழைந்தபோது அவரது படத்தைப் பார்த்தவர்கள் ஆள் பார்க்கவே கலராகவும் இல்லை, எம்ஜிஆர் மாதிரி பளபளப்பாகவும் இல்லை. ஆனால் படம் எப்படி ஓடுகிறது என்கிற கேள்வி எழுந்தது. ஆனால் ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோர் இதையெல்லாம் மாற்றினார்கள்.
தரணி இராஜேந்திரன் இந்த இளம் வயதில் மிகுந்த முதிர்ச்சியடைந்த பார்வையைக் கொண்டிருக்கிறார். அருமையான ஒரு கதையைக் கருப்பொருளாகத் தேர்வு செய்திருக்கிறார். இளம் இயக்குநர்கள் எதிர்பார்க்காத ஒன்றை எண்ணிப்பார்த்து முற்போக்கு சிந்தனையுடன் இதை அணுகியிருக்கிறார்” என்று பேசினார் தொல்.திருமாவளவன்