

'ஓடி ஓடி உழைக்கணும்' படம் தொடர்பாக சந்தானத்துக்கு தயாரிப்பாளர் கே.ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மணிகண்டன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'ஓடி ஓடி உழைக்கணும்'. இதில் காவல்துறை அதிகாரியாக சந்தானம் நடித்து வந்தார். அமைரா, யோகி பாபு உள்ளிட்ட சிலர் நடித்து வந்த இந்தப் படத்தை வாசன் விஷுவல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிற்கிறது.
தயாரிப்பாளருக்கு பணப் பிரச்சினை ஏற்பட்டதால் 'ஓடி ஓடி உழைக்கணும்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருக்கிறது. இந்நிறுவனத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களில் ஒருவருக்கு கடும் உடல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
ஆகையால் இந்தப் படத்துக்கு சந்தானம் உதவ வேண்டும் என்று தயாரிப்பாளர் கே.ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'சர்வர் சுந்தரம்' மற்றும் 'டகால்டி' படத்தின் பிரச்சினை முடிவுக்கு வந்தது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் கே.ராஜன் பேசும்போது, "சந்தானத்துக்கு ஒரு வேண்டுகோள். அவர் நடித்து வெளியான 'ஏ1' படம் சூப்பட் ஹிட். மேலும், அவர் நடித்த 'ஓடி ஓடி உழைக்கணும்' என்ற படம் பாதியில் நிற்கிறது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் இப்போது ரொம்பவே நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ’நிமிர்ந்து நில்’ என்ற படம் தமிழ் - தெலுங்கு என இருமொழிகளில் எடுத்துக் கடனாகிவிட்டார்.
அதனைத் தொடர்ந்து 'யங் மங் சங்' படமும் எடுத்து வெளியிட முடியாமல் இருக்கிறது. அவருக்கு சினிமா மட்டும்தான் தெரியும். வட்டிக்கு மேல் வட்டி என்று போய், இப்போது நோயால் அவதியுற்று ரொம்பவே பாவப்பட்ட நிலையில் இருக்கிறார். அந்தப் படத்தை மேற்கொண்டு முடிப்பதற்கு சந்தானம் பணம் வாங்காமல் முடித்துக் கொடுக்க வேண்டும். படம் வெளியாகும்போது கண்டிப்பாக வியாபாரமாகி சந்தானத்துக்குப் பணம் கொடுத்துவிடுவார்கள்.
அந்தத் தயாரிப்பாளரிடம் பணம் கேட்காமல் முடித்துக் கொடுத்து, படம் வெளியாகும்போது பணம் வாங்கிக் கொள்ளுங்கள். இதை சந்தானத்துக்கு ஒரு வேண்டுகோளாகவே கேட்கிறேன். இதை அவருடைய பாதம் தொட்டு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்" என்று பேசியுள்ளார் கே.ராஜன்.