

நீர்நிலை பாதுகாப்புக்கு ஒவ்வொரு இந்தியரும் முன்வந்து பங்காற்ற வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸ், அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படித் தப்பி வருவது குறித்து மக்களுக்குக் கற்றுத் தருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினியும் கலந்து கொண்டார். இதற்கான படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் நடைபெற்றது.
2 நாட்கள் நடந்த இந்தப் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் ரஜினி.
இந்நிலையில் இந்நிகழ்ச்சி குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதாக டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
'' ‘இன் டூ தி வைல்ட்’ நிகழ்ச்சி உண்மையில் ஒரு தனித்துவமான நிகழ்ச்சி. ஒரு பக்கம் இது ஒரு உற்சாகமூட்டக்கூடிய நிகழ்ச்சியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் மிகப்பெரிய சமூக நலனைக் கருத்தில் கொண்டு செயலாற்றும் நிகழ்ச்சியாகவும் இருக்கிறது. நிஜவாழ்க்கை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதற்காக உலகளாவிய அளவில் மதிக்கப்படும் டிஸ்கவரி நிறுவனத்தின் அதிகாரிகள் என்னைத் தொடர்பு கொண்டு பேசினர். ஒருவழியாக 40 ஆண்டு சினிமா வாழ்க்கைக்குப் பிறகு முதல் தொலைக்காட்சித் தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டேன். கிரில்ஸ் பல பிரபலங்களுடைய உயிர் பிழைக்கும் திறனைச் சோதித்திருக்கிறார். அந்தச் சவாலை நானும் எதிர்பார்த்திருந்தேன்.
நீர்நிலை பாதுகாப்புக்கு ஒவ்வொரு இந்தியரும் முன்வந்து பங்காற்ற வேண்டும். இந்த யுத்தம் அரசாங்கம், சமூகம் தொடங்கி ஒவ்வொரு தனிநபரையும் பாதிக்கக்கூடியதாகும். நீர்நிலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்வதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சரியான தளம்''.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறியதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.