

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர்.
24 ஏ.எம். நிறுவனம் தயாரித்து வந்த இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷாவும், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானும் பணிபுரிந்து வந்தார்கள். ஆனால், தயாரிப்பு நிறுவனமான 24 ஏ.எம். நிறுவனத்துக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார் சிவகார்த்திகேயன்.
ரவிக்குமார் படத்தின் படப்பிடிப்பு தொடங்க, நீண்டகாலமாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இறுதியில் தனக்கு இந்தப் படத்துக்கான சம்பளம் எதுவும் வேண்டாம் என முழுமையாக விட்டுக் கொடுத்தார் சிவகார்த்திகேயன். இதனால் கொஞ்சப் பிரச்சினைகள் முடிவுக்கு வந்தன. இதனைத் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடந்தது.
இறுதியில் கடைசி 30 நாட்கள் படப்பிடிப்பு இரண்டு ஷெட்டியூல்களாக இன்று (ஜனவரி 28) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தப் படத்தின் மீதான பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது தொடர்பாக 24 ஏ.எம். நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில், ''தங்களது 5-வது தயாரிப்பு படத்தின் கடைசி 2 ஷெட்டியூல்கள் பெரிய இடைவெளிக்குப் பின்பு இன்று தொடங்கியுள்ளோம். எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. இன்னும் சில நாட்களில் தலைப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளது.
நீண்ட நாட்கள் கழித்து படப்பிடிப்பு தொடங்கியுள்ளது குறித்து இயக்குநர் ரவிக்குமார் தனது ட்விட்டர் பதிவில், ''இந்த ஆண்டு மிகச் சிறப்பானதாக அமையுமென்ற வேட்கையோடு படப்பிடிப்பில்... நன்றி சிவகார்த்திகேயன் பிரதர்'' என்று தெரிவித்துள்ளார்.