

'பொன்னியின் செல்வன்' புகைப்படங்கள் அற்புதமாக இருந்தது என்று அந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து, அடுத்தகட்ட படப்பிடிப்புக்குத் தயாராகி வருகிறது படக்குழு.
இரண்டு பாகமாக உருவாகும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ரியாஸ் கான் உள்ளிட்டோரின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், சரத்குமார் உள்ளிட்டோரின் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.
இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சில புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பதிவில், "கடந்த வாரம் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து சில புகைப்படங்களைப் பகிர்ந்தார். பார்க்க அற்புதமாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.