

விமர்சனங்கள் நியாயமானவை அல்ல என்று 'ராஜாவுக்கு செக்' இயக்குநர் சாய் ராஜ்குமார் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன், இர்ஃபான், சிருஷ்டி டாங்கே, சாராயூ உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ராஜாவுக்கு செக்'. ஜனவரி 24-ம் தேதி வெளியான இந்தப் படத்தை சோமன் மற்றும் தாமஸ் இணைந்து தயாரித்திருந்தார்கள். எஸ்.டி.சி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டது.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும், சிலர் இந்தப் படத்துக்குப் பாராட்டும் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக இயக்குநர் சாய் ராஜ்குமார் தனது ட்விட்டர் பதிவில் "ஒரு படம், குற்றவாளியை, பாதிக்கப்பட்டவரே சகோதரனாக - மகனாக பார்க்க வலியுறுத்துகிறது. ஒரு படம் குற்றவாளியை சட்டப்படி இல்லாவிட்டாலும் தர்மப்படியாவது தண்டிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதில் எது சரி .. எனக்குப் புரியவில்லை.. உங்களுக்கு ? இயக்குநர் சேரன் சார்” என்று இயக்குநர் சேரனின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டார்.
அவருக்குப் பதிலளிக்கும் விதமாக சேரன் "மக்களின் தரப்பிலிருந்து எதை ஏற்றுக்கொள்கிறார்களோ அதுவே சரி.. என்னதான் பணபலத்தால் ஆள்பலத்தால் உண்மைகள் மறைக்கப்பட்டாலும் நாளுக்கு நாள் ராஜாவுக்கு செக் நல்லா இருக்கு என்ற செய்திகள் வந்துகொண்டிருப்பதே அதற்குச் சான்று சாய் ராஜ்குமார் சார்" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் சாய் ராஜ்குமார், "ஒரு பெரிய கோட்டை சின்ன கோடாக மாற்ற அதன் அருகில் அதைவிடப் பெரிய கோடு போடவேண்டும் , ஆனால் அப்படிச் செய்யாமல் அந்த பெரிய கோட்டை பலத்தால் அழித்து சிறியதாக்கி சின்ன கோட்டை பெரிய கோடாகக் காட்டுவது சரியா ? புரிந்தால் பதில் சொல்லவும் இயக்குநர் சேரன் சார்" என்று பதிவிட்டார்.
மேலும் இயக்குநர் சாய் ராஜ்குமார், "ராஜாவுக்கு செக் இந்தப்படம் பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் அல்ல , படம் முடிந்து பல மாதம் கழித்துத் தான் அந்த சம்பவமே நடந்தது. ஹைதராபாத் என்கவுண்டர் பற்றிய படமும் அல்ல , ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பின் தான் அந்த சம்பவம் நடந்தது
ராஜாவுக்கு செக் படம் பார்க்க நினைக்கும் மக்களுக்கு, இந்தப்படம் பார்க்கலாமா வேண்டாமா என்பதைப் படம் பார்த்தவரிடம் மட்டும் கேட்டு முடிவு செய்யுங்கள் , விமர்சனங்களை மட்டும் வைத்து முடிவு செய்யாதீர்கள், ஏனென்றால் இங்கு எல்லா விமர்சனங்களும் நியாயமானவை அல்ல" என்று தெரிவித்துள்ளார்.
விமர்சனம் தொடர்பான சாய் ராஜ்குமாரின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் சேரன் "மக்களை அப்படியெல்லாம் ஏமாற்றிவிடமுடியாது சாய் ராஜ்குமார் சார். பெரும்பாலும் நமது படங்களுக்கு வரும் விமர்சனங்கள் நன்றாகவே சொல்லப்பட்டிருக்கிறது. சில அரைகுறை விமர்சனங்கள் பற்றி நாம் கவலைப்படவேண்டாம். இறுதியில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்று பதிலளித்துள்ளார் சேரன்.