

காதல் தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன் காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார் ப்ரியா பவானி சங்கர்.
'மான்ஸ்டர்' படத்தைத் தொடர்ந்து, ராதா மோகன் இயக்கத்தில் உருவாகும் 'பொம்மை' படத்தில் எஸ்.ஜே.சூர்யா - ப்ரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே எஸ்.ஜே.சூர்யா - ப்ரியா பவானி சங்கர் இருவரும் காதலித்து வருவதாகச் செய்திகள் பரவியது. பலரும் இது தொடர்பாகச் செய்திகளை வெளியிட்டு வந்தார்கள். 'அவர் எனக்குத் தோழி' என்று எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பதிவில் விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்தார். அதனைத் தொடர்ந்தும் சிலர் செய்திகளை வெளியிட்டு வந்தனர்.
இதனிடையே, தனது காதலரை இன்ஸ்டாகிராம் பதிவில் அறிமுகப்படுத்தியுள்ளார் ப்ரியா பவானி சங்கர். இவரது பெயர் ராஜ். ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகிறார். ராஜுவின் பிறந்த நாளை முன்னிட்டு ப்ரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "பத்து வருடத்துக்கு முன்னால் கல்லூரியில் மிக சந்தோஷமாக, தன்னம்பிக்கையுடன், குறைந்த கவர்ச்சியும், சுமாரான தோற்றமும் கொண்ட என்னை நீ காதலிக்கும்போது எனக்கு ஆச்சரியமாக இல்லை.
ஆனால் (இன்று) எல்லாவற்றையும் தாண்டி இன்றும் என்னுடன் நீ இருக்க விரும்புவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். தனது உடைந்த பாகங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கும் ஒருவருடன் இருப்பது அவ்வளவு மகிழ்ச்சியைத் தராது. நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை, சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை.
எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கறேன். நட்சத்திரங்கள் நிறைந்த என் உலகத்தில் நீ மட்டுமே சூரியன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார் ப்ரியா பவானி சங்கர்.