அகரம் என்றால் நான் என்பதை மலிவாகப் பார்க்கிறேன்: மீண்டும் கண்கலங்கிய சூர்யா

அகரம் என்றால் நான் என்பதை மலிவாகப் பார்க்கிறேன்: மீண்டும் கண்கலங்கிய சூர்யா
Updated on
2 min read

அகரம் என்றால் சூர்யா என்பதை மிகவும் மலிவாகப் பார்க்கிறேன் என்று கண்கலங்கியபடியே குறிப்பிட்டார் சூர்யா.

அகரத்தின் தொலைவைக் கடந்துவரத் துணை நின்ற அறம் சார் மனிதர்கள், சமூக நலன்சார் கொடையாளர்கள், தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவர் குறித்து நினைவுகள் சூழ, அகரம் பத்தாண்டுகள் 'தடம் விதைகளின் பயணம்' நிகழ்வு நேற்று (ஜனவரி 26) நடைபெற்றது. இதில் சிவக்குமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சூர்யா பேசும் போது, "முதலில் சத்யபாமா பல்கலை கழக வேந்தர் மரியஜீனா ஜான்சன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அகரம் கட்டளையின் இந்த வளர்ச்சிக்கு என் நண்பன் ஞானவேலும், ஜெயஶ்ரீ அவர்களும் முக்கிய காரணம். அவர்களின் எண்ணங்களும், ஊக்குவிப்பும் மேலும் இரவு பகல் பார்க்காமல் அவர்கள் செலுத்தும் அசுர உழைப்பினால் தான் இன்று அகரம் இந்த 10 ஆண்டுகள் கடந்தும் கம்பீர நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நான் நன்றி கூற இயலாது, அடையாளம் காண்பிக்க முடியும்” என்று பேசினார் சூர்யா.

பின்பு ஞானவேல், ஜெயஸ்ரீ ஆகியோரை குடும்பத்தினரை மேடைக்கு அழைத்தார் சூர்யா. அப்போது ஜெயஸ்ரீ தனது கணவர் மற்றும் மகன் துருவாவுடன் மேடையேறினார். அப்போது துருவாவைக் கையில் பிடித்துக் கொண்டு "எனக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். அம்மாவுடனான நேரம் அவர்களுக்கு எவ்வளவு முக்கியமென்று தெரியும். அது இல்லாமல் தினமும் ஜெயஸ்ரீயை இவன் அனுப்பிவைக்கிறான். நம்முடைய பிரார்த்தனைகளில் இவர்களுடைய பெயரும் இருக்கவேண்டும்" என்று கண் கலங்கியபடியே பேசினார் சூர்யா.

அதனைத் தொடர்ந்து சூர்யா பேசும் போது, "அகரம் என்றால் சூர்யா என்று சொல்வதை மலிவாகப் பார்க்கிறேன். நானும் ஒரு சகபயணி தான். அகரம் ஒரு குடும்பம், பழைய தலைமுறையினருடன் புதிய தலைமுறையினரும் ஒன்று சேர்ந்து பயணிக்கும் பாதையே அகரம். அகரம் குடும்பத்தில் 3000க்கும் அதிகமான மாணவர்கள் என்பது எளிதான காரியமல்ல, இங்குள்ள அனைவரின் ஒட்டுமொத்த உழைப்பே அகரம்.

மாணவர்களின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அவர்களின் வாழ்க்கைத்தரத்தைக் கல்வி அளிப்பதின் மூலம் மேம்படுத்தி அவர்களின் குடும்பம், சொந்த பிரச்சனைகளைச் சமாளித்து அவர்களைச் சரியான பாதையில் பயணிக்க வைப்பது என்பது அகரம், இது அனைவரின் மூலம் நிகழ்த்தும் சாதனை. அகரம் அறக்கட்டளையில் அனைத்து தம்பி தங்கைகளுடன் நானும் ஒரு சகபயணியாகப் பயணிப்பது மட்டுமன்றி எனது பங்களிப்பையும் செலுத்துவேன்.

மூன்று விஷயங்கள் என்றுமே நம்மைச் சுற்றி இருக்கும். நம் குடும்பம், நம் சமுகம், நம் வேலை. இந்த மூன்றிலும் நாம் சமநிலையை பராமரிக்க வேண்டும். மூன்றிற்கும் உங்களால் முடிந்த நேரத்தைச் செலவிடுங்கள். அகரம் அறக்கட்டளையின் வெற்றி என்பது அகரம் மாணவர்கள் கல்வி, வேலை ஆகியவற்றில் பெறும் வெற்றியே என்று நான் கூறுவேன். நாம் மற்றவர்களுக்குப் பயனுள்ளவர்களாக இருந்தால் நம் வாழ்க்கை முழுமை பெறும்.

அகரம் அறக்கட்டளையின் புதிய முயற்சி “இணை”. முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்களை இணைத்து அவர்கள் படித்த பள்ளிகளின் மேம்பாட்டிற்கும், அங்குப் படிக்கும் மாணவர்களின் வளரச்சிக்கும் உதவுவதே இந்த முயற்சியின் நோக்கம். மேலும் நிறையப் படங்களில் நடிப்பேன், நன்றாகச் சம்பாதிப்பேன், நிறைய நல்ல உதவிகளைச் செய்வேன்" என்று பேசி முடித்தார் சூர்யா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in