

'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதியின் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இதுவரை இந்தப் படத்திலிருந்து விஜய் மட்டுமே இருக்கும் 2 போஸ்டர்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. தற்போது படத்தில் வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதி இருக்கும் மூன்றாவது போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை விஜய் - விஜய் சேதுபதி இருவருமே இடம்பெற்றிருக்கிறார்கள். இந்தப் போஸ்டரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, வி.ஜே.ரம்யா, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏப்ரல் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பைப் பிப்ரவரிக்குள் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்தப் படத்தில் நடித்துக் கொண்டே தனது படத்துக்கான கதை கேட்கும் பணிகளைத் தொடங்கியுள்ளார் விஜய். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.