ஏவிஎம் ஜனவரி 14... ஜெமினி ஜனவரி 26 - ‘அன்பே வா’, ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ ரிலீஸ்
வி.ராம்ஜி
’நீயா நானா’ எனும் போட்டி, எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் எப்போதுமே இருந்திருக்கிறது. ஆனாலும் அந்தப் போட்டியை பொறாமையாக்கிக் கொள்ளவும் இல்லை. ரிலீஸின் போது முஷ்டி மடக்கிக் கொள்ளவும் இல்லை. அப்படித்தான், எம்ஜிஆரும் சிவாஜியும் நட்பும் தோழமையும் அன்புமாக இருந்திருக்கிறார்கள்.
எம்ஜிஆர் - சிவாஜி படங்கள் ஒரேநாளில் ரிலீசாகியிருக்கின்றன. என்றாலும் எம்ஜிஆர் பாணியில் அந்தப் படமும் சிவாஜி பாணியில் இந்தப்படமும் இருக்கும். எம்ஜிஆர் ரசிகர்களும் சிவாஜி படத்தைப் பார்ப்பார்கள். சிவாஜி ரசிகர்களும் எம்ஜிஆரின் படத்தைப் பார்ப்பார்கள். இப்படித்தான் இருந்தது அந்தக் காலம்.
1966ம் ஆண்டு அந்த வகையில் மறக்கமுடியாத ஆண்டாக அமைந்தது. எம்ஜிஆரின் திரையுலக வாழ்வில், ‘அன்பே வா’ படம் மறக்கமுடியாத படமாக வந்திருப்பதை இன்றைக்கும் நாம் உணரலாம்.
ஒரு எம்ஜிஆர் படமென்றால் யாரெல்லாம் இருப்பார்களோ அவர்கள் எல்லோரும் இதில் உண்டு. சரோஜாதேவி, அசோகன், நாகேஷ், மனோரமா என பலரும் நடித்திருந்தார்கள். எம்ஜிஆரும் ரசிகர்களும் தமிழ் சினிமாவும் இந்தப் படத்தை மறக்கவே முடியாததற்கு, மிக முக்கியமான காரணம்... பிரமாண்டமான தயாரிப்பு நிறுவனமான ஏவி.எம். எம்ஜிஆரை வைத்து தயாரித்த ஒரே படம் இதுதான்!
அதேபோல், இன்னொரு காரணமும் உண்டு. 66ம் ஆண்டிலெல்லாம், எம்ஜிஆர் ஃபார்முலா என உருவாக்கி, அதுமாதிரியான கதைகளில்தான் எம்ஜிஆர் நடித்துவந்தார். அந்தசமயத்தில், எம்ஜிஆர் ஃபார்முலாவில் ஒன்று கூட இல்லாமல், மென்மையான காதல் கதையாக உருவாக்கியிருந்தார்கள். அதுதான் ‘அன்பே வா’.
1966ம் ஆண்டு பொங்கலுக்கு வந்தது ‘அன்பே வா’. இந்தநாளில் ரிலீஸ் செய்யவேண்டும் என ஏவி.எம். விரும்பியது. காரணம்... 65ம் ஆண்டு பொங்கலுக்கு, எம்ஜிஆரின் ‘எங்க வீட்டு பிள்ளை’ வெளியானது. அதேபோல், 66ம் ஆண்டு பொங்கலுக்கு ‘அன்பே வா’ படத்தை வெளியிட ஆசைப்பட்டது ஏவி.எம். அதற்கு சம்மதித்த எம்ஜிஆர், அதற்கு தகுந்தது போலவே இன்னும் சில தேதிகளை ஒதுக்கிக் கொடுத்து ஒத்துழைத்தார். படமும் பொங்கலுக்கு ரிலீசானது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இதே 66ம் ஆண்டில், சிவாஜியின் படமும் வெளியானது. எம்ஜிஆரின் ‘அன்பே வா’ ஏவி.எம் தயாரிப்பு. சிவாஜியின் அந்தப்படம் ஜெமினி எஸ்.எஸ்.வாசனின் தயாரிப்பு. அந்தப் படம் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’. சிவாஜியும் செளகார் ஜானகியும் கணவனும் மனைவியுமாக பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். ஏற்கெனவே, சிவாஜியும் செளகார் ஜானகியும் ’பார் மகளே பார்’, ’படிக்காத மேதை’, ‘பச்சை விளக்கு’, ‘புதிய பறவை’ என பல ஹிட் படங்களில் நடித்திருந்தனர். அந்த வகையில், இந்தப் படமும் ஹிட் ஜோடியாகவும் ஹிட் படமாகவும் அமைந்தது. இதையடுத்துதான் ஏவிஎம் தயாரிப்பில், ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் இருவரும் சேர்ந்து நடித்த படமும் வெளியானது.
வேப்பத்தூர் கிட்டு கதை, வசனம் எழுதியிருந்தார். சிவாஜியும் செளகாரும் ஏகப்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோராக நடித்திருந்தார்கள். ஒருகட்டத்தில், சிவாஜிக்கு இன்னொரு குடும்பம் இருப்பது தெரியவரும். மிக அற்புதமான உணர்வுகளை வெளிக்காட்டிய வகையில், மிகச்சிறந்த படம் என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள்.
ஜெமினியின் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ திரைப்படத்துக்கும் ஏவிஎம்மின் ‘அன்பே வா’ படத்துக்கும் எம்.எஸ்.வி.தான் இசை. ‘அன்பே வா’ படத்தை ஏ.சி.திருலோசந்தர் இயக்கினார். ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் இயக்குநர் ‘பாலு’ என்று டைட்டிலில் வரும். இவர் வேறு யாருமல்ல... எஸ்.எஸ்.வாசனின் மகனும் ‘ஆனந்த விகடன்’ ஆசிரியருமான எஸ்.பாலசுப்ரமணியம்தான் அவர்.
ஏவிஎம், ஜெமினி இரண்டு நிறுவனமுமே மிகப்பிரமாண்டமான நிறுவனங்கள். ‘அன்பே வா’, ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ இரண்டுமே ஏராளமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். இதில் ‘அன்பே வா’ வண்ணப்படமாக வந்தது. ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ கருப்பு வெள்ளைப் படம். இது எம்ஜிஆர் படம். அது சிவாஜி படம்.
எம்ஜிஆரின் படம் பொங்கலுக்கு வரவேண்டும் என்று ஏவிஎம் விரும்புவதை அறிந்த வாசன், ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தை பத்துநாட்கள் கழித்து வெளியிடலாம் என முடிவு செய்துவிட்டார். அந்தக் காலத்தில், தயாரிப்பாளர்களுக்குள்ளேயும் இயக்குநர்களுக்கு மத்தியிலும் நடிகர்களுக்கு நடுவிலும் அப்படியொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இருந்தது.
அதனால்தான், எம்ஜிஆரின் ‘அன்பே வா’ 66ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொங்கலுக்கு வெளியானது. சிவாஜியின் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ திரைப்படம், 66ம் ஆண்டு, ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று வெளியானது. இரண்டு படங்களுமே வெற்றிபெற்றன. படம் வெளியாகி 54 வருடங்களாகிவிட்டன.
இங்கே... ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ பற்றி கொசுறு தகவல்... இந்தப்படத்தில் சிவாஜியின் மகளாக நடித்தவர், பிறகு இரண்டு வருடங்கள் கழித்து சிவாஜிக்கு ஜோடியாகவும் நடிக்கத் தொடங்கினார். அப்படி அவர்கள் ஜோடியாக நடித்த முதல் படம்... ‘கலாட்டா கல்யாணம்’. அந்த நடிகை... ஜெயலலிதா!
