உடல் எடையை அதிகரிக்கும் அசோக் செல்வன்

உடல் எடையை அதிகரிக்கும் அசோக் செல்வன்
Updated on
1 min read

தெலுங்கில் அனி சசி இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க, தன் உடல் எடையை அதிகரித்து வருகிறார் அசோக் செல்வன்

தமிழில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அசோக் செல்வன், 'தெகிடி' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தவர் தற்போது 'ஓ மை கடவுளே' படத்தில் நாயகனாக நடித்துள்ளார். பிப்ரவரி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ள இந்தப் படத்தில் ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதனிடையே ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள 'மாராக்கர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அசோக் செல்வன். இந்தப் படத்தை ப்ரியதர்ஷனுடன் இணைந்து எழுதியுள்ளார் அனி சசி. இவர் மலையாளத்தில் பிரபலமான இயக்குநரான ஐவி சசியின் மகனாவார்.

தற்போது அனி சசி இயக்கவுள்ள தெலுங்குப் படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் அசோக் செல்வன். இந்தப் படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமாகிறார். இதில் நித்யா மேனன் மற்றும் ரீத்து வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் சமையல்காரராக நடிக்கவுள்ளதால், இதற்காக உடல் எடையை அதிகரித்து வருகிறார் அசோக் செல்வன். அவர் உடல் எடையை அதிகரித்தவுடன் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in