

போராடிக் கிடைத்த அனுபவங்களால் பக்குவமாகியுள்ளதாக 'வானம் கொட்டட்டும்' இசை வெளியீட்டு விழாவில் சாந்தனு நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'வானம் கொட்டட்டும்'. தனா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபஸ்டின், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
'வானம் கொட்டட்டும்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சாந்தனு பேசும் போது, "கடந்த 10 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருந்தேன். அதில் கிடைத்த அனுபவங்கள் என்னைப் பக்குவப்படுத்தியிருக்கிறது. அதன்பிறகு இந்த படத்தின் மூலம் சிறந்த பாதை உருவாகியுள்ளதில் மகிழ்ச்சி.
இந்தப் படம் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படமாக இருக்கும். ஐஸ்வர்யா ராஜேஷுடன் ஜோடியாக நடித்திருக்கிறேன். என்னுடைய இயல்பான கதாபாத்திரம் தான் இப்படத்தில் பிரதிபலிக்கும். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறேன் என்பதில் பெருமை. இரண்டு படங்களில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறேன். குணச்சித்திர வேடத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன்.
இரண்டு நாயகர்கள் இருக்கும் படத்தில் நடித்து வருகிறேன். இப்படத்தில் எனது பாத்திரம் சிறியது தான் என்றாலும், நாம் எந்த பாத்திரத்தில் நடித்தாலும் அனைவரிடமும் சென்று சேரக்கூடிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
மேலும், சிறந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து நடிப்பதும் முக்கியம். அவர்கள் தான் மக்களிடையே கொண்டு சேர்ப்பார்கள். சரத்குமார் மற்றும் ராதிகாவுடன் சில காட்சிகள் என்றாலும் அவர்களுடன் நடித்தது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது” என்று பேசினார் சாந்தனு.