கமல் தயாரிப்பில் ரஜினி: லோகேஷ் கனகராஜ் இயக்கம் - இணையத்தில் குவியும் வாழ்த்து

கமல் தயாரிப்பில் ரஜினி: லோகேஷ் கனகராஜ் இயக்கம் - இணையத்தில் குவியும் வாழ்த்து
Updated on
1 min read

கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு, இணையத்தில் வாழ்த்து குவிந்து வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'இந்தியன் 2' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கமல். அதே போல் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்றாலும், 'அபூர்வ ராகங்கள்', 'மூன்று முடிச்சு','அவர்கள்', 'தப்பு தாளங்கள்', 'தாயில்லாமல் நானில்லை', 'நினைத்தாலே இனிக்கும்', 'ஆடு புலி ஆட்டம்', 'இளமை ஊஞ்சலாடுகிறது', 'தில்லு முல்லு' என ஆரம்பகால கட்டத்தில் மட்டுமே இணைந்து நடித்தார்கள்.

பின்பு இருவருமே தனித்தனி பாதையை வகுத்துக் கொண்டார்கள். இப்போது விரைவில் இருவருமே திரையுலகை விட்டு விலகி, முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளனர். இதில் கமல்ஹாசன் தனியாகக் கட்சித் தொடங்கி பாராளுமன்றத் தேர்தலைச் சந்தித்தார். அதே போல், விரைவில் தனியாகக் கட்சித் தொடங்குவதற்காக ஆயத்தப் பணிகளை நீண்ட காலமாகக் கவனித்து வருகிறார் ரஜினி.

இந்நிலையில் சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தைத் தொடர்ந்து நடிக்கவுள்ள படம் தான் ரஜினியின் கடைசிப் படமாக இருக்கும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். இது தொடர்பாக தமிழருவி மணியன் கூட "அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் படம் தான் ரஜினியின் கடைசிப் படமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை கமல் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனத்துக்குச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் பரவி வருகிறது. மேலும், இதனை 'கைதி', 'மாஸ்டர்' படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் எனத் தெரிகிறது. சமீபத்தில் கூட ராஜ்கமல் நிறுவனத்துக்கு லோகேஷ் கனகராஜ் படம் பண்ணவுள்ளதைச் சூசகமாக உறுதி செய்தார் கமல். அந்தப் படத்தில் தான் ரஜினி நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது.

ரஜினியின் திரையுலக வாழ்க்கை கமலுடன் நடித்துத் தொடங்கியது. அதே போல், திரையுலகில் அவரது கடைசிப் படத்தையும் கமலின் ராஜ்கமல் நிறுவனத்துக்காகச் செய்யவுள்ளார் ரஜினி. இந்தத் தகவல் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, பலரும் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகிறார்கள். திரையுலகினர் பலரும் 'செம காம்போ.. மரண வெயிட்டிங்' எனத் தெரிவித்து வருகிறார்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in