

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் 'தாராள பிரபு' படத்துக்கு 8 இசையமைப்பாளர்கள் ஒப்பந்தமாகியுள்ளனர்.
ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற படம் இந்திப் படம் ‘விக்கி டோனர்’. ஷுஜித் சர்கார் இயக்கிய இந்தப் படம்தான், ஆயுஷ்மான் குரானா நடித்த முதல் படம். நடிகர் ஜான் ஆப்ரஹாம் தயாரித்த இந்தப் படம், 2012-ம் ஆண்டு ரிலீஸானது. ரொமான்டிக் காமெடி வகையைச் சேர்ந்த இந்தப் படம், விந்து தானம் மற்றும் குழந்தைப் பேறின்மை ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
பாக்ஸ் ஆபீஸில் வசூலைக் குவித்தது மட்டுமன்றி, 3 தேசிய விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளையும் பெற்றது. ‘ஸ்டார்பக்’ என்ற கனடா படத்தைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
'தாராள பிரபு' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், விவேக், தான்யா ஹோப் ஆகியோர் நடித்து வருகிறார்கள். கிருஷ்ணா மாரிமுத்து இயக்கி வரும் இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்தப் படத்தின் இசைக்கு 8 இசையமைப்பாளர்கள் பணிபுரியவுள்ளனர். அவர்களின் பெயர்களைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி அனிருத், ஷான் ரோல்டன், விவேக் - மெர்வின், மேட்லி ப்ளூஸ், பரத் ஷங்கர், ஊர்கா குழு, கபீர் வாசுகி மற்றும் இன்னோ கங்கா ஆகியோர் பணிபுரியவுள்ளனர். 8 இசையமைப்பாளர்கள் பணிபுரியவுள்ளதால் இதன் இசை உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.