

கூட்டணியை உறுதி செய்து நாயகன் பேட்டியளித்த நிலையில், இயக்குநர் சீனுராமசாமி ட்வீட்டால் கேள்வி எழுந்துள்ளது.
விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாமனிதன்'. யுவன் இசையமைத்துத் தயாரித்து வரும் இந்தப் படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்துவிட்டாலும், படத்தின் பைனான்ஸ் பிரச்சினையால் வெளியீட்டில் சிக்கல் நிலவி வருகிறது.
இதனிடையே சீனு ராமசாமியின் அடுத்த படத்தை 'ஜிப்ஸி' படத்தைத் தயாரித்து வரும் அம்பேத்குமார் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் முதலில் ஷான் நிகம் நடிப்பதாக இருந்தது. ஆனால், தேதிகள் பிரச்சினையால் இந்தக் கூட்டணி நடைபெறவில்லை.
இந்நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான 'சாம்பியன்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஷ்வா. சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் தான் இலங்கை அகதியாக நடிக்கவுள்ளதாக பேட்டியளித்த விஷ்வா. இதற்குப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தார்கள்.
இந்தப் பேட்டித் தொடர்பாக சீனு ராமசாமி எந்தவொரு கருத்துமே தெரிவிக்காமல் இருந்தார். திடீரென்று தனது ட்விட்டர் பதிவில் "என் அடுத்த படத்திற்கான அறிவிப்பு என்னிடம் இருந்து முறையாக வரும். அதுவரை வரும் தகவல்கள் உண்மையல்ல.." எனத் தெரிவித்துள்ளார் சீனு ராமசாமி.
நாயகனாக நடிக்கவுள்ளவர் சந்தோஷமாகப் பேட்டியளித்த நிலையில், இயக்குநரின் ட்வீட் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இந்தக் கூட்டணி உருவாகுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.