

'ஜில் ஜங் ஜக்' படம் தொடர்பான தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார் இயக்குநர் தீரஜ் வைத்தி.
தீரஜ் வைத்தி இயக்கத்தில் சித்தார்த், அவினாஷ் ரகுதேவன், சனத் ரெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'ஜில் ஜக் ஜங்'. இந்தப் படத்தின் வித்தியாசமான விளம்பரங்கள், டீஸர், ட்ரெய்லர் மூலம் பெரும் எதிர்பார்ப்பு உண்டானது. ஆனால், 2016-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியைத் தழுவியது.
இந்தப் படத்துக்குப் பிறகு தீரஜ் வைத்தி தனது படத்தை இயக்கவில்லை. இதனிடையே தற்போது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் தீரஜ் வைத்தி, "டிசம்பர் 24, 2016: நான் என்றும் மறக்க முடியாத நாள். சினிமா பின்னணி இல்லாத நானும் இன்னும் சிலரும் சேர்ந்து எடுத்த எனது முதல் படம், அந்த வருடம் வந்த மோசமான பத்து படங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டிருந்தது. என்னை சினிமாவுக்கு வர வேண்டாம் என்று கூறியவர்களின் வீட்டு வாசலில் விழும் நாளிதழ் அது.
அந்த நாள் எனக்கு அச்சமூட்டியது. "நான் சொன்னேன் இல்லையா" என்பது போன்ற அவர்களின் முக பாவனையை மீண்டும் பார்க்க வேண்டும். எனது வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஏரியை ஒட்டி நீண்ட நேரம் நடந்தேன். வருடத்தின் மோசமான படத்தை நான் எடுத்திருக்கிறேன் என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. (மனதில்) மறுத்துக் கொண்டே இருந்தேன். மனமுடைந்தேன். என்னுள் தொலைந்து போனேன். பயங்கரக் குழப்பத்திலிருந்தேன்.
ஜனவரி 21, 2020: இந்தப் பதிவைக் கண்டேன். இந்தியப் படங்களைப் பார்த்து விமர்சிக்கும் ஒரு அமெரிக்க விமர்சகர் எழுதியது. 2016-ன் சிறந்த இந்தியப் படங்கள் பட்டியலில் அவர் என் படத்தையும் வைத்துள்ளார். 'சாய்ராட்', 'கம்மட்டிப்பாடம்', 'டங்கல்', 'விசாரணை' போன்ற படங்களோடு சேர்த்து. உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் நான் இன்னமும் அதிக குழப்பத்தில் இப்போது இருக்கிறேன். என்னால் என் சொந்தப் படத்தைப் பற்றியே தற்போது யோசிக்க முடியவில்லை. அதனால் அதை இப்போதைக்கு (என் தரப்பில்) ஆறப்போடுகிறேன். படத்தைப் பற்றிய எனது கடைசிப் பதிவு இதுவே" என்று தெரிவித்துள்ளார் தீரஜ் வைத்தி.