ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டி: தமிழ் சினிமா ரசிகர்கள் vs தெலுங்கு சினிமா ரசிகர்கள் - சித்தார்த் காட்டம்

ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டி: தமிழ் சினிமா ரசிகர்கள் vs தெலுங்கு சினிமா ரசிகர்கள் - சித்தார்த் காட்டம்
Updated on
1 min read

இன்றைய ட்விட்டர் ஹேஷ்டேக் போட்டியில் தமிழ் சினிமா மற்றும் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மோதலாக உருவாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் ட்விட்டர் தளத்தில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சண்டை என்பது வழக்கமான ஒன்று. எப்போதாவது கடுமையாகச் சூடுப் பிடித்து, கடும் சொற்களால் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் இந்திய அளவில் போட்டிப் போட்டு ட்ரெண்ட் செய்வார்கள். யாருடைய ஹேஷ்டேக்கில் அதிகமான ட்வீட்கள் வருகிறதோ, அதை வைத்து நாங்க ஜெயித்தோம் என்று அதுக்கு ஒரு ஹேஷ்டேக் தயாராகி ட்ரெண்ட்டாகும்.

அதே போல் தான் தெலுங்கு திரையுலகிலும். அங்கு முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் இதே போன்ற போட்டியில் ஈடுபடுவார்கள். சமீபத்தில் கூட மகேஷ் பாபு மற்றும் அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு இடையே ஹேஷ்டேக் போட்டி நடந்தது.

ஆனால், இன்று (ஜனவரி 22) தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் இருவருக்கும் இடையே ஹேஷ்டேக் போட்டி நடைபெற்று வருகிறது. #TeluguRealHeroes மற்றும் #UnrivalledTamilActors ஆகிய இரண்டு ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் 2-வது மற்றும் 3-வது இடத்திலும் ட்ரெண்ட்டாகி வருகிறது.

இதில் எங்களுடைய படங்களைத் தான் நீங்கள் ரீமேக் செய்கிறீர்கள் என்று தெலுங்கு ரசிகர்களும், இந்தக் காட்சிக்கு இணையான காட்சி உங்களிடம் உண்டா என்று தமிழ் ரசிகர்களும் கடும் வார்த்தைப் போரில் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்ட்டிங் போட்டிக்குள் நடந்து வருகிறது.

இதுவரை தனித்தனியாக தங்களுடைய நடிகர்களுக்காக மோதி வந்தார்கள், இப்போது மொழி ரீதியாக மோதி வருவது பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ட்ரெண்ட் தொடர்பாக சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில் "இன்றைய தென்னிந்திய ரசிகர்களின் பைத்தியம் போட்டி #UnrivalledTamilActors மற்றும் #TeluguRealHeroes. இணையம் எவ்வளவு வேஸ்ட்டாகிவிட்டது. நமது நாட்டுக்கு இந்த இளைஞர்கள் அவர்களுடைய வாழ்க்கை ரீதியிலும், மொபைல் இணையம் வழியாகவும் நிறையச் செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in