

'பொன்னியின் செல்வன்' கதையைப் படமாக்க நிறையப் பேர் முயற்சி செய்தார்கள். ஆனால், மணிரத்னம் நடத்திக் காட்டுவார் என்று சரத்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து, அடுத்தகட்ட படப்பிடிப்புக்குத் தயாராகி வருகிறது படக்குழு.
இரண்டு பாகமாக உருவாகும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ரியாஸ் கான் உள்ளிட்டோரின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், சரத்குமார் உள்ளிட்டோரின் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.
இதனிடையே 'பொன்னியின் செல்வன்' தொடர்பான கேள்விக்கு சரத்குமார் "படம் உருவாகும் விதம் எனக்குப் பிடித்திருக்கிறது. எனது தோற்றம், உடைகள், ஒப்பனை என எல்லாமே ஒரு குறிப்பிட்ட வகையில் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்.
நிறையப் பேர் பொன்னியின் செல்வனை எடுக்க முயற்சித்திருக்கின்றனர். மணிரத்னம் அதை நடத்திக் காட்டுவார் என நினைக்கிறேன். மனம், ஆன்மா என அத்தனையும் கொடுத்து அர்ப்பணிப்புடன் இந்தப் படத்துக்கான ஆய்வைச் செய்திருக்கிறார். கண்டிப்பாகப் படம் வெளியாகும்போது அவர் வெற்றிபெறுவார்" என்று தெரிவித்துள்ளார் சரத்குமார்.
ஜூன் மாதம் வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் வழங்க முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம்.