

பிரசாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கும் 'ப்ரூஸ் லீ' படத்தின் நாயகியாக நடிக்க நயன்தாரா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
ஆதிக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' திரைப்படம் செப்டம்பர் 17ம் தேதி வெளியாக இருக்கிறது. அப்படத்தைத் தொடர்ந்து 'ப்ரூஸ் லீ', 'கெட்ட பயடா இந்த கார்த்தி' மற்றும் சாம் ஆண்டன் இயக்கவிருக்கும் படம் ஆகிய படங்களில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
'ப்ரூஸ் லீ' படத்தை இயக்குநர் பாண்டிராஜிடம் இணை இயக்குநராக பணியாற்றிய பிரசாந்த் இயக்கவிருக்கிறார். பாண்டிராஜ் வசனம் எழுதியிருக்கும் இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
இப்படத்தின் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். விரைவில் அவர் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாக படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.
மேலும், 'கெட்ட பயடா இந்த கார்த்தி' மற்றும் சாம் ஆண்டன் இயக்கவிருக்கும் படம் ஆகிய இரண்டு படங்களையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.