

'வலிமை' படத்தில் நடந்தது என்ன என்பது குறித்து பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து மிண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். 'வலிமை' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தையும் ஜீ ஸ்டுடியோஸ் வழங்க, போனி கபூர் தயாரித்து வருகிறார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற முதற்கட்டப் படப்பிடிப்பைத் தொடர்ந்து, சென்னையில் சில முக்கியமான காட்சிகளைப் படமாக்கி வருகிறது படக்குழு. இந்தப் படத்தில் அஜித்துடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைப் படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இதனிடையே, இந்தப் படத்தில் பிரசன்னா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், படக்குழுவினர் அதனை உறுதி செய்யவில்லை. மேலும், ட்விட்டர் தளத்தில் பிரசன்னாவின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு ”'வலிமை' படத்தில் பிரசன்னா. பதிலளியுங்கள் அண்ணா” என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு "இல்லை ப்ரோ. தகவலுக்காகக் காத்திருக்கிறேன்" என்று பதிலளித்தார் பிரசன்னா. இந்த பதிலால் பேச்சுவார்த்தை நடந்தது உறுதி செய்யப்பட்டது.
தற்போது, 'வலிமை' படம் தொடர்பாக ஒரு கடிதம் ஒன்றைத் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார் பிரசன்னா. அதில், "’வலிமை’ படத்தில் நான் நடிக்கவேண்டும் என்று விரும்பி அன்புடன் வாழ்த்திய ஒவ்வொருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைக் கூறிக் கொள்கிறேன். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது நானும் உங்களைப் போலவே ஆவலுடன் காத்திருந்தேன்,
என் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிடும் நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 'தல'யுடன் திரையைப் பகிர்ந்து கொள்ளும் இந்த அற்புதமான வாய்ப்பு இம்முறை நடக்கவில்லை. இதில் அதீத வருத்தங்கள் இருந்தபோதிலும் உங்கள் அனைவருடைய அன்பினாலும் நான் மிகவும் உறுதியாக உணர்கிறேன்.
இரண்டாவது வாய்ப்பு என்ற ஒன்று எப்போதும் உண்டு. வெகு விரைவில் எனது கனவான 'தல'க்கு வில்லனாக நடிப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். எனக்காக முயற்சி செய்த சுரேஷ் சந்திராவுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. உங்கள் அனைவரையும் மிகவும் நேசிக்கிறேன். தொடர்ந்து உங்கள் அன்பை எனக்கு அளியுங்கள். எனக்கு அது மட்டும் போதும்” என்று தெரிவித்துள்ளார் பிரசன்னா.