

நான் அரசியல் ஆய்வாளர் அல்ல என்று மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது ஸ்ருதிஹாசன் குறிப்பிட்டார்.
தமிழில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் 'லாபம்' மற்றும் தெலுங்கில் கோபிசந்த் மாலினினேனி இயக்கத்தில் ரவிதேஜாவுடன் 'க்ராக்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ருதிஹாசன். இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக நடிக்கக் கதைகள் கேட்டு வருகிறார்.
இதனிடையே மதுரையில் தனியார் தங்க நகைக் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார் ஸ்ருதிஹாசன். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களையும் சந்தித்தார். அப்போது, கமலின் அரசியல் வருகை, அப்பாவைத் தொடர்ந்து நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை ஸ்ருதிஹாசனிடன் பத்திரிகையாளர்கள் எழுப்பினர்.
அவற்றுக்கு ஸ்ருதிஹாசன் பதிலளிக்கும் விதமாகப் பேசும்போது, "அப்பாவுக்கு எப்போதுமே என் ஆதரவு உண்டு. ஆனால், எனக்கு அரசியல் அறிவு கிடையாது. ஆகையால் அரசியலுக்கு வருவேன் என்று சொல்ல முடியாது. நான் எப்போதுமே மற்றவர்களுடைய பணியோடு என் பணியை ஒப்பிடுவதை விரும்புவதில்லை. கடவுள் ஆசிர்வாதத்தால் என்னுடைய பணியில் என்ன சாதிக்க வேண்டுமோ அதைச் செய்வேன்.
சிறுவயதிலிருந்தே அப்பாவுக்கு சமூக அக்கறை இருந்து வருகிறது. இப்போது அது அரசியலாக மாறியிருக்கிறது. அதில் புதிதாக ஒன்றுமில்லை. அதைப் பார்ப்பதற்குச் சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. ரஜினி சார் - அப்பா கூட்டணி தொடர்பாக எல்லாம் கருத்துச் சொல்ல முடியாது. ஏனென்றால் நான் அரசியல் ஆய்வாளர் அல்ல" என்று பேசினார் ஸ்ருதிஹாசன்.