சினிமாவில் அரசியல் பண்ண மாட்டேன்!- உதயநிதி ஸ்டாலின் சுவாரஸ்ய நேர்காணல்

சினிமாவில் அரசியல் பண்ண மாட்டேன்!- உதயநிதி ஸ்டாலின் சுவாரஸ்ய நேர்காணல்
Updated on
2 min read

‘‘நான் முழுக்க இயக்குநரின் நடிகன். எந்த படமாக இருந்தாலும், முழுமையாக இயக்குநரிடம் ஒப்படைத்துவிடுவேன். அவர் என்ன சொல்கிறாரோ, அதுதான் என்னிடம் வெளிப்படும். இந்தமுறை ‘சைக்கோ’ படத்தில் மிஷ்கினுடன் பயணித்தது மகிழ்ச்சி..’’ என்று உற்சாகத்துடன் கூறுகிறார் உதயநிதி ஸ்டாலின். அவருடனான நேர்காணலில் இருந்து..

மிஷ்கின் இயக்கத்தில் அறிமுகம் ஆகியிருக்க வேண்டிய நீங்கள், அவரோடு கூட்டணி சேர ஏன் இவ்வளவு தாமதம்?

’யுத்தம் செய்’ கதையை எனக்காகதான் மிஷ்கின் எழுதினார். போட்டோ ஷூட்கூட முடிந்த நிலையில், ராஜேஷின் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ (ஓகேஓகே) கதையும் வந்தது. ‘‘முதல் படம் கொஞ்சம் கலர்ஃபுல்லா பண்ணேன்..’’ என்று எல்லோரும் சொன்னதால் ‘ஓகேஓகே’யை தேர்வு செய்தேன். ‘யுத்தம் செய்’ படத்தை பார்த்துவிட்டு, ‘அடடா.. மிஸ் பண்ணிட்டோமே’ என்று நினைத்தேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் சொன்ன ஒருவரி கதைதான் ‘சைக்கோ’. அது இப்போது படமாகிஇருக்கிறது.

ஹீரோயிஸம், பாட்டு, டான்ஸ் என போய்க்கொண்டு இருந்த உங்களுக்கு மிஷ்கின் பட அனுபவம் எப்படி இருந்தது?

இந்த படத்தில் உதயநிதியாக இல்லாமல், கவுதமாகதான் தெரிவேன். என் தோற்றம் எப்படி இருக்கணும்னு நிறைய டெஸ்ட் செய்தோம். எதுவும் செட்டாகல. கடைசியா, ஷூட்டிங் தொடங்குறதுக்கு முந்தைய நாள், அவரே உட்கார்ந்து எனக்கு முடி வெட்டிவிட்டு, ‘இதுதான் என் கவுதம்’ என்றார். இதில் ஹீரோயிஸ காட்சியே இருக்காது. ஒரு சண்டையாவது வைக்கலாமே என்றேன். ‘அப்புறம் வழக்கமான படமாகிடும்’னு சொல்லி மறுத்துவிட்டார்.

பட அனுபவம் குறித்து..

வீட்டில் லென்ஸ் போட்டு நடித்து, வீடியோ எல்லாம் எடுத்து மிஷ்கினுக்கு அனுப்புவேன். ‘கண்ணம்மா.. சூப்பர்ம்மா.. ஆனா, இது வேண்டாம்மா’ என்று கூலாக சொல்லிடுவார். படம் முழுக்கவே கண்ணாடி போட்டேதான் இருப்பேன். பல காட்சிகளில் லென்ஸ் போட்டே நடித்தேன். அது மிஷ்கினுக்கு தெரியாது. ஒரு காட்சியில் தெரிந்து, திட்டிவிட்டார். ஒருசில நாட்கள் இரவு வரை படப்பிடிப்பு போகும் என நினைப்போம். பத்தே நிமிடத்தில் முடித்துவிடுவார். அவர் நினைத்த மாதிரி காட்சி அமைந்துவிட்டால், குழந்தைபோல பாராட்டுவார்.

இளையராஜா இசை, படக்குழுவினர் குறித்து..

இளையராஜா இசையில் ஒரு படம் பண்ணிவிட வேண்டும் என்ற ஆசை எல்லா நடிகர்களுக்கும் இருக்கும். அது எனக்கு இப்படத்தில் நிறைவேறியது. படத்தில் அதிதி ராவ்தான் நாயகி. ஆனால், எனக்கும் அவருக்கும் 2 நாள்தான் ஷூட்டிங் இருந்தது. படம் முழுக்க நித்யாமேனன் தான் என்னோடு பயணிப்பார். அவருடையது சவாலான கதாபாத்திரம்.

மனதுக்கு ரொம்ப பிடித்த படம் எது?

முதல் படமான ‘ஓகேஓகே’ பெரியஹிட். அதை சொல்லலாம். ‘நிமிர்’, ‘கண்ணே கலைமானே’ ஆகியவை என் மனதுக்கு ரொம்பவே நெருக்கமானவை.

8 ஆண்டுகளில் 10 படங்களில் நாயகனாக நடித்தது போதுமா?

‘ஓகேஓகே’ படத்துக்கு பிறகு என்ன பண்ணுவதென்று தெரியாமல் ஒன்றரை ஆண்டுகள் சும்மா உட்கார்ந்திருந்தேன். சில படம் வெற்றி அடைந்துள்ளது, சில படங்கள் அடையவில்லை. எனக்கு மிகவும் பிடித்த ‘கண்ணே கலைமானே’ கமர்ஷியலாக போகவில்லை. இப்போது டிவியில் பார்த்துவிட்டு பலரும் பாராட்டுகிறார்கள். திரையரங்குக்கு சென்று படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதுபோல. வருடத்துக்கு 1 படம், 2 படம்.. சும்மா ஒரு படம்.. இப்படி எல்லாம் நடிப்பதில் விருப்பம் இல்லை.

ராஜேஷுடன் மீண்டும் கூட்டணி எப்போது?

ரொம்ப நாளாகவே பேசிட்டு இருக்கோம். ‘ஓகேஓகே’ 2-ம் பாகம் செய்யலாம் என்று சில மாதங்களுக்கு முன்புகூட பேசினோம். சந்தானம் பெரிய ஹீரோ ஆகிவிட்டதால், ‘பார்த்தா’ கேரக்டர் போல செய்ய முடியாது. இரண்டு நாயகர்கள் கதை போல அமைந்தால் செய்யலாம்.

‘மனிதன்’ படத்துக்கு பிறகு, கதைத் தேர்வில் வெகுவாக மாறிவிட்டீர்களோ?

காமெடி நண்பன், பார்த்ததும் காதல், வெளிநாட்டில் டூயட், கிளைமாக்ஸ் சண்டை.. என்ற வழக்கமான கதை என்றாலே தவிர்த்துவிடுகிறேன். நானே அதுபோல சில படங்கள் செய்துவிட்டேன். ஜனரஞ்சக படங்களும் பண்ண வேண்டும். அதே சமயம், சவாலான கதையாக இருக்க வேண்டும் என்பதே ஆசை.

திமுக இளைஞர் அணி செயலாளர் என்றவுடன் பயந்தீர்களா?

நிறைய விமர்சனங்கள் வரும் என அப்பாவும் முதலில் தயங்கினார். ஆனால், அதற்கான அறிவிப்பு வந்ததும் சந்தோஷமானேன். அதை நான் பதவியாகப் பார்க்கவில்லை. பொறுப்பாகப் பார்க்கிறேன். சினிமாவில் அரசியல் பண்ணமாட்டேன். அரசியலில் நடிக்க மாட்டேன்.

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதிக்கு நடிகர் உதயநிதி எந்த அளவுக்கு உதவியாக இருக்கப்போகிறார்?

ஏற்கெனவே பரிச்சயமான முகம் என்பதால் மக்கள் எளிதாக ஏற்றுக்கொண்டனர். இளைஞர் அணி செயலாளர் உதயநிதிக்கு அதுவே ஒரு உதவிதானே.

‘துக்ளக்’ விழாவில் ரஜினி பேசியதற்கு, ‘முரசொலி’யின் நிர்வாக இயக்குநராக உங்கள் பதில்?

அதை ரஜினி தவிர்த்திருக்கலாம். அது அதிமுக நடத்தும் பத்திரிகை என்பது அவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.

நடிகரைவிட இளைஞர் அணி செயலாளர் அதிகம் விமர்சனத்துக்கு ஆளாவது ஏன்?

கட்சியின் கொள்கை பிடிக்காதவர்கள் விமர்சிக்கவே செய்வார்கள். அதுபற்றி எல்லாம் கவலைப்படுவது இல்லை. நம் வேலையைப் பார்த்துட்டு, போய்ட்டே இருக்கணும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in