

’சந்தனத்தேவன்’ படத்துக்கு பைனான்சியர்கள் வைத்த நிபந்தனை என்ன என்பதை இயக்குநர் அமீர் காட்டமாகக் குறிப்பிட்டார்.
அசோக் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மாயநதி'. அபி சரவணன், வெண்பா, 'ஆடுகளம்' நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை முகில் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. பவதாரிணி இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று (ஜனவரி 20) சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் படக்குழுவினரோடு இசையமைப்பாளர் யுவன், இயக்குநர்கள் அமீர், சுப்பிரமணிய சிவா, எஸ்.ஆர்.பிரபாகரன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் தனது 'சந்தனத்தேவன்' படம் தொடங்கப்படாமல் இருப்பதற்கான காரணத்தை தன் பேச்சில் குறிப்பிட்டுள்ளார் அமீர்.
'சந்தனத்தேவன்' படம் தொடர்பாக அமீர்," 'சந்தனத்தேவன்' என்ற ஒரு படத்தைத் தொடங்கினேன். அது ஒரு பிரீயட் ஃபிலிம். கிட்டத்தட்ட 35 நாட்கள் படப்பிடிப்பு முடிந்து, இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நான்தான் அந்தப் படத்துக்குத் தயாரிப்பாளர். அதுக்கு ஒரு பைனான்சியர்தான் பணம் கொடுத்தார். அதற்குப் பிறகு 10 பைனான்சியர்கள் வரை என்னைச் சந்தித்தார்கள்.
அவர்கள் அனைவருமே எனக்குப் போட்ட கண்டிஷன் என்னவென்றால், 'நீ பொதுவெளியில் பேசக்கூடாது; அரசியலை எதிர்த்து கருத்துச் சொல்லக் கூடாது, மத்திய அரசு - மாநில அரசு இரண்டையும் ரொம்பவே பேசுகிறீர்கள். அதனால் சிக்கல் இருக்கிறது’ என்றார்கள். இதற்கு நீங்கள் உத்தரவாதம் அளித்தால் பைனான்ஸ் பண்றோம் என்று தெரிவித்தார்கள்.
அப்போது என்னை விற்று சினிமா எடுப்பது பைத்தியக்காரத்தனம் என நினைத்துக் கொள்வேன். அப்படியொரு சினிமாவை என்னால் செய்ய முடியாது. நான் நானாகவே இருப்பேன்" என்று தன் பேச்சில் குறிப்பிட்டார் அமீர்.