

இளையராஜா பற்றிய பதிவுகள் வேண்டும் என்று இசையமைப்பாளர் யுவனுக்கு அமீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
அசோக் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மாயநதி'. அபி சரவணன், வெண்பா, 'ஆடுகளம்' நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை முகில் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. பவதாரிணி இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று (ஜனவரி 20) சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் படக்குழுவினரோடு இசையமைப்பாளர் யுவன், இயக்குநர்கள் அமீர், சுப்பிரமணிய சிவா, எஸ்.ஆர்.பிரபாகரன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.
இதில் இயக்குநர் அமீர் பேசும்போது, ”உலக வரலாற்றிலேயே இளையராஜா குடும்பம் போன்று ஒரு இசைக் குடும்பம் இருந்ததே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு குடும்பம் தமிழ்க் குடும்பமாகக் கிடைத்தது நாம் செய்த பாக்கியம்.
எம்.ஜி.ஆர். இன்று வரை நினைவுகூரப்படுகிறார். ஆனால், அவரோடு வேலை செய்தவர்களிடம் பேசி அதை ஒரு ஆவணமாக ஆக்கவில்லை என்பதுதான் உண்மை. அதே போல், சிவாஜி சாரிடம் வேலை செய்தவர்களும் இப்போது யாருமில்லை. பிலிம்ஸ் நியூஸ் ஆனந்தன் வைத்திருந்த தகவல்களையே நாம் ஆவணம் செய்யாமல் விட்டுவிட்டோம். அது தமிழக அரசும், தமிழ்த் திரையுலகமும் செய்த தவறு.
நம் தமிழ்நாட்டில் இன்று மூன்றே கலைஞர்கள் தான் பெரிய கலைஞர்கள். இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன். அவர்கள் இருக்கும்போதே அவர்களைப் பற்றிய பதிவுகளை அவர்களை விட்டே பேசி பதிவு செய்ய வேண்டும். அதை சினிமாவில் இருப்பவர்களே செய்வார்களா எனத் தெரியவில்லை.
இங்கு அனைத்து சங்கங்களுமே மூடுவிழா நடத்திக்கொண்டு இருக்கும் சூழல். தமிழ் சினிமாவின் நிலை அவ்வளவு மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. அதனால்தான் இளையராஜா பற்றிய பதிவுகளை யுவனிடம் ஆவணமாக ஆக்குங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். இன்னும் 10-20 ஆண்டுகள் கழித்துக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் இருக்கிறது. இதற்கு யுவனுக்கு உதவி செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என்று பேசினார் இயக்குநர் அமீர்.