

தமிழில் உருவாகவுள்ள 'அந்தாதூன்' ரீமேக்கை மோகன் ராஜா இயக்கவுள்ளதாகவும், இதில் பிரசாந்த் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. சுமார் 40 கோடி ரூபாயில் உருவான இந்தப் படம் உலக அளவில் சுமார் 450 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.
மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதினையும் வென்றது. இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியில், தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார்.
இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார் என்றும், இயக்குநர் மற்றும் இதர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்.
இதனிடையே, இந்த ரீமேக்கை மோகன் ராஜா இயக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவரும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
'வேலைக்காரன்' படத்துக்குப் பிறகு 'தனி ஒருவன் 2' படத்தின் கதை, திரைக்கதையை உருவாக்கி முடித்தார் மோகன் ராஜா. ஜெயம் ரவியை வைத்து உருவாக்கத் திட்டமிட்டு, அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டார். ஆனால், 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஜெயம் ரவி பிஸியாகிவிட்டதால் தற்போதைக்கு அந்தப் படத்தின் பணிகளை ஒத்திவைத்துள்ளார்.
இதனால் 'அந்தாதூன்' தமிழ் ரீமேக்கை முடித்துவிட்டு, 'தனி ஒருவன் 2' படத்தை ஜெயம் ரவியை வைத்து இயக்குவார் எனத் தெரிகிறது.