

விவசாயி தற்கொலை என்பது சமுதாயத்திற்கே பெரும் இழப்பு என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் தற்சார்பு வேளாண்மையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த பங்களிப்பை அளிப்பவர்களுக்கு உழவர் விருதுகளும் ஒரு லட்சத்திற்கான காசோலையும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தற்சார்பு வேளாண்மையில் நேரடி விற்பனையில் சிறந்து விளங்கும் விவசாயி திருமூர்த்தி, பாரம்பரிய சிறுதானிய விதைகள் சேமிப்பில் ஜனகன், சிறந்த விவசாயப் பங்களிப்பிற்கு மனோன்மணி ஆகியோருக்கு விருதுகளும் தலா ஒரு லட்சத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிழ்களை நடிகர் சிவகுமார் வழங்கினார்.
அதோடு சிறு குறு விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் கருவிகளை வடிவமைப்பவர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக உடுமலைப்பேட்டை சசிகுமாருக்கு 75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக வேலூர் ராஜா மற்றும் கரூர் துரைசாமிக்கு 25 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ஈரோடு பொறியியல் கல்லூரி மாணவர்கள் கோகுல் மற்றும் நண்பர்களுக்கு 25 ஆயிரமும், சிறப்பு பரிசாகப் புதுக்கோட்டை மாவட்டம் பள்ளி மாணவர் சுபாஷ் சந்திர போஸுக்கு 25 ஆயிரமும் பரிசுத் தொகை, விருது மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன.
இந்த விழாவில் கார்த்தி பேசும்போது, "விவசாயிகளைக் கவுரவப்படுத்தி அங்கீகரிக்க வேண்டும். விவசாயிகள் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஒரு விவசாயி தற்கொலை என்பது அந்தக் குடும்பத்திற்கு மட்டும் அல்ல, அது சமுதாயத்திற்கே பெரும் இழப்பு” என்று பேசினார்.
மேலும், விவசாயிகள் தற்சார்பு வேளாண்மையை நோக்கி நகர வேண்டிய முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். சிறு, குறு விவசாயிகளுக்குப் பயன்படும் கருவிகளை வடிவமைக்க பொறியியல் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி, பார்வைத் திறன் சாவல் உள்ள விவசாயி, உற்பத்தி விலை இல்லாமல் நலிவடையும் விவசாயி, மாற்றத்திற்கான பள்ளியில் தற்சார்பு வேளாண்மையைக் கற்கும் மாணவர்கள் ஆகியோருக்கு தலா 50,000 ரூபாய் ஊக்கத் தொகையும் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது.