

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் 'தலைவி' படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடித்து வருவது உறுதியாகியுள்ளது.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத், அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தலைவி'. இந்தப் படம் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படும் படமாகும். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடித்து வருகிறார். அண்மையில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் கடும் விவாதத்தை உண்டாக்கியது. எம்.ஜி.ஆராக நடித்து வரும் அரவிந்த்சாமியின் லுக்கை நேற்று (ஜனவரி 17) எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டார்கள். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஜெயலலிதாவின் வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் என்றால் அது சசிகலாதான். ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான இவர், அவரது மறைவு வரைக்கும் கூடவே இருந்து கவனித்துக் கொண்டார். இவர் மீது பல சர்ச்சைகளும் உண்டு. தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
ஜெயலலிதாவின் பயோபிக்கான 'தலைவி' படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது யார் என்று கேள்வி எழுந்தது. இதில் பலரின் பெயர்களை முன்வைத்துச் செய்திகள் வெளியாகி வந்தன. தற்போது, அந்தக் கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடித்து வருவது உறுதியாகியுள்ளது. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மிகவும் ரகசியமாகப் படமாக்கி வருகிறது படக்குழு.
ஜனவரி 26-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.