

'ஆக்ஷன்' படம் படுதோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, மீண்டும் தனது காமெடி களத்துக்குத் திரும்பியுள்ளார் இயக்குநர் சுந்தர்.சி
2019-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான 'வந்தா ராஜாவாதான் வருவேன்' மற்றும் 'ஆக்ஷன்' ஆகிய படங்கள் பெரும் தோல்வியைச் சந்தித்தன. இதில், சுந்தர்.சி - விஷால் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான 'ஆக்ஷன்' படுதோல்வியைத் தழுவியது. இது சுந்தர்.சியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு, தற்போது தன் காமெடி களத்துக்குத் திரும்பியுள்ளார் இயக்குநர் சுந்தர்.சி. அவரது இயக்கத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'அரண்மனை', 'அரண்மனை 2' ஆகியவற்றின் தொடர்ச்சியாக 'அரண்மனை 3' படத்தை இயக்கவுள்ளார். இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். அனைத்துமே பேச்சுவார்த்தை ரீதியில் இருக்கும் நிலையில், ஒப்பந்தப் பணிகள் இன்னும் ஓரிரு வாரத்தில் முடிவடைந்து, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடிக்க, சுந்தர்.சி திட்டமிட்டுள்ளார். அதற்குத் தகுந்தாற் போல் நடிகர்களிடம் தேதிகள் வாங்கப்பட்டுள்ளன.