Published : 17 Jan 2020 08:18 PM
Last Updated : 17 Jan 2020 08:18 PM

எம்.ஜி.ஆர் கெட்டப்புக்கு அரவிந்த்சாமியின் மெனக்கிடல்: ஏ.எல்.விஜய் பகிர்வு

எம்.ஜி.ஆர் கெட்டப்புக்கு அரவிந்த்சாமியின் மெனக்கிடல் குறித்து இயக்குநர் ஏ.எல்.விஜய் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு ’தலைவி’ என்ற படம் தயாராகி வருகிறது. ஜூன் 26-ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது.

ஏ.எல்.விஜய் இயக்கி வரும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடித்து வருகிறார். அண்மையில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் கடும் விவாதத்தை உண்டாக்கியது. இன்று (ஜனவரி 17) எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் என்பதால், 'தலைவி' படத்தில் எம்.ஜி.ஆராக நடித்து வரும் அரவிந்த்சாமியின் லுக், டீஸரை வெளியிட்டுள்ளனர். இதற்கு இணையவாசிகள் மற்றும் பிரபலங்கள் பலரும் சரியான தேர்வு என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே 'தலைவி' படத்தில் அரவிந்த்சாமி நடித்திருப்பது தொடர்பாக ஏ.எல்.விஜய் கூறியதாவது:

" ‘தலைவி’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வில் எனக்குக் கிடைத்த வரம் ஆகும். தமிழ்நாட்டை இன்றைக்கு இருக்கும் இந்த உயர்நிலைக்கு மாற்றிய, இரண்டு சகாப்தங்களின் வாழ்வை நெருங்கிப் பார்த்து, அதனைத் திரை வடிவமாக்குவது எவருக்கும் கிடைத்திராத அரிய வாய்ப்பு. இது ஒரு மிகப்பெரிய அனுபவம்.

இதிலுள்ள மிகப்பெரும் சவால் என்பது, இப்படத்திற்குச் சரியான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதே. நிஜத்தில் வாழ்ந்தவர்களின் தோற்றத்தைப் பிரதிபலிப்பதுடன், திரையில் அந்த ஆளுமையை மறு உருவாக்கம் செய்வது மிக அவசியம் ஆகும். நடிகை கங்கணா ரணாவத்தை முதல்வர் ஜெயலலிதா பாத்திரத்திற்குத் தேர்வு செய்த பின், எம். ஜி. ஆரின் பாத்திரத்திற்குப் பலரைக் கருத்தில் கொண்டு முயன்று பார்த்தோம். இறுதியாக அரவிந்த்சாமி மிகப் பொருத்தமானவர் என அவரைத் தேர்ந்தெடுத்தோம்.

இன்றும் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர் எம்.ஜி.ஆர். அவரைத் திரையில் கொண்டுவருவது எளிதான செயல் அல்ல. அவரைப் பற்றிய அத்தனைத் தகவல்களையும் திரட்டி அரவிந்த்சாமியை அதே விதமான லுக்கிற்கு மாற்றினோம். எங்களை விட அவர் இந்தக் கதாபாத்திரத்தின் மீது அதிக காதல் கொண்டு தன்னைப் பல விதங்களில் தயார் செய்து கொண்டார்.

திரையில் அந்த ஆளுமைக்கு நியாயம் செய்யும்படியான உழைப்பை நாங்கள் அனைவரும் தருவோம். பாரத ரத்னா வாங்கி, இந்தியாவின் மிகப்பெரும் தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆரை திரையில் வடிப்பது எங்கள் அனைவரின் பாக்கியம்”.

இவ்வாறு இயக்குநர் ஏ.எல்.விஜய் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x