

'வாரணம் ஆயிரம்' வழியைப் பின்பற்றி விஷ்ணு விஷால் வெளியிட்ட கடிதத்துக்கு கவுதம் மேனன் வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
விவாகரத்து, குழந்தையின் பிரிவு, மது போதை, உடல் பிரச்சினைகள், நிதி இழப்பு என பல்வேறு பிரச்சினைகளிலிருந்து மீண்டது தொடர்பாக கடிதம் ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் விஷ்ணு விஷால். இந்தக் கடிதத்தை வெளியிடும்போது தனது ட்விட்டர் பதிவில் 'வாரணம் ஆயிரம்' வழியில் எனத் தெரிவித்தார்.
ஏனென்றால், கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'வாரணம் ஆயிரம்' படத்தில் தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வி, போதைக்கு அடிமை உள்ளிட்டவற்றிலிருந்து நாயகன் சூர்யா உடற்பயிற்சி செய்து அதிலிருந்து மீள்வார். அதே போன்றதொரு பாணியையும் விஷ்ணு விஷால் பின்பற்றியதால் தனது பதிவில் அவ்வாறு குறிப்பிட்டார்.
விஷ்ணு விஷாலின் இந்த இரண்டு பக்கக் கடிதத்துக்கு இணையத்தில் பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஷ்ணு விஷாலின் இந்தப் பதிவுக்கு கவுதம் மேனன், "உண்மையில் இது உத்வேகம் அளிக்கிறது விஷ்ணு. எங்களுக்குத் தெரியப்படுத்தியதற்கு நன்றி. அந்த 'வாரணம் ஆயிரம்' வழி வேலை செய்கிறது!" என்று தெரிவித்துள்ளார்.
அவருக்கு நன்றி கூறும் விதமாக விஷ்ணு விஷால், "எனக்கு உத்வேகம் அளித்ததற்காக நன்றி சார். ஆம், அந்த 'வாரணம் ஆயிரம்' வழி வேலை செய்கிறது. தரமான சினிமாவுக்கான இன்னொரு சக்திவாய்ந்த உதாரணம், யதார்த்தத்தைச் சந்தித்துப் பல ஆண்டுகளுக்கும் பொருந்தும் படம் அது" என்று தெரிவித்துள்ளார்.
விஷ்ணு விஷாலின் கடிதத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சில பிரபலங்களின் கருத்துகள்:
விக்னேஷ் சிவன்: வியப்பாக உள்ளது ப்ரோ! உண்மையில் உத்வேகமாகவும் இதய பூர்வமாகவும் உள்ளது!! இப்படித்தான் செல்ல வேண்டும். விஷ் யு ஆல் லக். நிறைய நல்லெண்ணத்தையும் தன்னம்பிக்கையையும் இது கொடுக்கட்டும், கடவுள் உங்கள் பக்கம் பிரதர்.
மகேந்திரன்: பெரிய ஈடுபாடு, நல்ல மாற்றம்
சாந்தனு: மச்சான் இது வேற லெவல் இன்ஸ்பிரேஷன்.. உன் மேல் மிகப்பெரிய மரியாதை ஏற்படுகிறது. ஆழமான மன உறுதி இருந்தால் மட்டுமே இந்த மாற்றம் சாத்தியம். உனக்கு என் கூடுதல் அன்பு. மென்மேலும் முன்னேறு ராக் ஸ்டார்.