Published : 17 Jan 2020 04:23 PM
Last Updated : 17 Jan 2020 04:23 PM

94-ல், பொங்கலுக்கு கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, பாக்யராஜ்; ‘மகாநதி’, ‘அமைதிப்படை’, ‘சேதுபதி ஐபிஎஸ்’ செம ஹிட்டு! 

வி.ராம்ஜி


94ம் ஆண்டு, பொங்கல் பண்டிகைக்கு கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், பாக்யராஜ் படங்கள் வெளிவந்தன. இதில், கமலின் ‘மகாநதி’, சத்யராஜின் ‘அமைதிப்படை’, விஜயகாந்தின் சேதுபதி ஐபிஎஸ்’ என மூன்று படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. பாக்யராஜின் ‘வீட்ல விசேஷங்க’ நூறுநாள் படமாக அமைந்து வெற்றிபெற்றது.


94ம் ஆண்டு, பொங்கல் திருநாளில், ‘மகாநதி’, ‘சேதுபதி ஐபிஎஸ்’, ‘அமைதிப்படை’, ‘ராஜகுமாரன்’, ’வீட்ல விசேஷங்க’, ‘சிந்துநதி பூ’, ‘சிறகடிக்க ஆசை’ என படங்கள் வெளியாகின. ‘மகாநதி’ படத்தில் கமல், சுகன்யா, பூர்ணம் விஸ்வநாதன், விஎம்ஸி.ஹனீபா, எஸ்.என்.லட்சுமி, மகாநதி ஷோபனா முதலானோர் நடித்திருந்தனர். சந்தானபாரதி இயக்கினார்.


‘16 வயதினிலே’ படத்தைத் தயாரித்த அம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ.ராஜ்கண்ணு, இந்தப்படத்தை தயாரித்தார். இளையராஜா இசையில் எல்லாப் பாடல்களும் ஹிட்டடித்தன. ‘தைப்பொங்கலும் வந்தது பாலும் பொங்குது’ பாடல், இன்றைக்கும் பொங்கலுக்கு ஒலிபரப்புகிற, ஒளிபரப்புகிற பாடலாக அமைந்திருக்கிறது. சிறைக்குள் நடக்கிற கொடூரங்களை, தோலுரித்துக் காட்டிய திரைக்கதை திடுக்கிட வைத்தது. மகாநதி சங்கர் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமானார்.


ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில், சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டதுதான் ‘ராஜகுமாரன்’. பிரபு நாயகன். நதியா, மீனா நடித்திருந்தனர். பிரபுவின் 100வது படம். இளையராஜா இசையில் எல்லாப் பாடல்களும் வெற்றிபெற்றன.


மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த ‘அமைதிப்படை’ வெளியானது. கஸ்தூரி, ரஞ்சிதா, சுஜாதா, மணிவண்ணன் முதலானோர் நடித்திருந்தனர். ஏவிஎம் தயாரிப்பில், பி.வாசு இயக்கத்தில், விஜயகாந்த் நடிப்பில், ‘சேதுபதி ஐபிஎஸ்’ வெளியானது. இந்தப் படத்துக்கும் இளையராஜாதான் இசையமைத்தார்.


பாக்யராஜ், பிரகதி, மோகனா நடிப்பில், ‘வீட்ல விசேஷங்க’ வெளியானது. இதிலும் இளையராஜாதான் இசை. பாடல்கள் செம ஹிட்டு. இதேவருடத்தில், கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் செந்தமிழன் இயக்கத்தில், ‘சிந்துநதிபூ’ வெளியானது. சிவகுமார் நடித்த ‘சிறகடிக்க ஆசை’ வெளியானது.


‘அமைதிப்படை’ அல்வாவும் அமாவாசையும் சோழ தேசத்திலிருந்து ஓர் எம் எல் ஏவும் சத்யராஜின் நக்கல் நையாண்டி வசனங்களும் இன்றைக்கு வரை பிரபலம். படம் ரிலீசான போதே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிரிபுதிரி ஹிட்டைக் கொடுத்தது.


இதேபோல், பி.வாசுவின் ‘சேதுபதி ஐபிஎஸ்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மீனாவின் நடிப்பும் பாராட்டும்படி இருந்தது. ஆக்‌ஷனையும் கதையையும் கலந்து கொடுத்து, ஹிட் படமாக்கியிருப்பார் பி.வாசு.


பிரபுவின் ‘ராஜகுமாரன்’ 100வது படமாக அமைந்தது. ஆர்.வி.உதயகுமாரின் படங்கள் வரிசையாக ஹிட்டடித்துக் கொண்டிருந்த வேளையில், கதை, பாடல்கள், லொகேஷன், ஸ்கிரிப்ட் என எல்லாம் இருந்தும் படம் சரியாகப் போகவில்லை.


’சிறகடிக்க ஆசை’ மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. ‘சிந்துநதிபூ’ பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகி, ஓரளவுக்கு ஓடியது.
94ம் ஆண்டில், ‘மகாநதி’, ‘அமைதிப்படை’, ‘சேதுபதி ஐபிஎஸ்’, ‘வீட்ல விசேஷங்க’ என நான்கு படங்களும் ஹிட்டடித்தன. மிகப்பெரியவெற்றியைப் பெற்றன. கமல், சத்யராஜ், விஜயகாந்த், பாக்யராஜ் படங்கள் என பொங்கல் களைகட்டியது.


‘மகாநதி’, ‘அமைதிப்படை’, ‘சேதுபதி ஐபிஎஸ்’, வீட்ல விசேஷங்க’, ‘ராஜகுமாரன்’ என ஐந்து படங்களுக்கும் இளையராஜாதான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x