

துல்கர் சல்மான் நடிக்கவுள்ள புதிய தமிழ்ப் படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கவுள்ளார்.
2019-ம் ஆண்டு வெளியான 'கோமாளி' படத்தின் பிரம்மாண்டமான வெற்றியால், மீண்டும் தமிழ்த் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரவுள்ளார் காஜல் அகர்வால். தற்போது ஷங்கர் - கமல் இணையும் 'இந்தியன் 2' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள 'குயின்' தமிழ் ரீமேக்கான ’பாரீஸ் பாரீஸ்’ வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
இதனிடையே, மும்பையில் கண்காட்சி ஒன்றின் தொடக்க விழாவில் காஜல் அகர்வால் கலந்து கொண்டார். அப்போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதில் 'இந்தியன் 2' கதாபாத்திரம் குறித்து, “என்ன மாதிரியான கதாபாத்திரம் என்று சொன்னால் படக்குழுவினர் என்னைக் கொன்றுவிடுவார்கள். ஆனால், ரொம்ப வலுவான முக்கியமான கதாபாத்திரம் என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்ல முடியும்.
பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதற்காகத் தயாராகி வருகிறேன். முந்தைய எனது திரையுலகக் கதாபாத்திரங்களை விட வித்தியாசமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை” என்று தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்.
மேலும் 'இந்தியன் 2' தவிர்த்து வெப் சீரிஸ் ஒன்றில் கவனம் செலுத்தி வருவதாகவும், அதனைத் தொடர்ந்து துல்கர் சல்மானுடன் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்.