

'மாநாடு' படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை அவரது ரசிகர்களே முடிவு செய்யலாம் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் 'மாநாடு'. இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தையில் இருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
'மாநாடு' படத்தில் சிம்புவுடன் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்று (ஜனவரி 16) மாலை அறிவித்துள்ளார். இதனிடையே, இந்தப் படம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
இந்த வீடியோ பதிவில் வெங்கட் பிரபு, "`'மாநாடு' படத்தில் நடிக்கவுள்ளவர்கள் விவரத்தைத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நிறையப் பேர் அருமையான கேள்விகள் எல்லாம் கேட்டிருந்தீர்கள். இது எஸ்.டி.ஆரின் 'மாநாடு' தான்.
இது நடிக்கவுள்ள முக்கியமான நடிகர் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். அதுக்கான ஒரு பில்டப் உடன் வெளியாகும். இந்த நேரத்தில் சிம்பு ரசிகர்களுக்கு ஒரு செய்தி. இந்தப் படத்தில் முதல் முறையாக ஒரு முஸ்லிம் இளைஞராக சிம்பு நடிக்கவுள்ளார். அதற்கு நாங்கள் எல்லாம் ஒரு நல்ல பெயரை யோசித்தோம்.
அனைத்து சிம்பு ரசிகர்களும் 'மாநாடு' படக்குழுவில் தங்களையும் உட்படுத்திக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு. என்னவென்றால், சிம்புவின் கேரக்டர் பெயர் என்ன என்பதை நீங்கள் முடிவு செய்யப் போகிறீர்கள். #str_as என்ற ஹேஷ்டேக்கை உபயோகித்து, என்ன பெயர் வைக்கலாம் என்று சொல்லுங்கள்.
நீங்கள் சொல்லும் பெயரை நாங்கள் தேர்வு செய்தால், எங்களுடன் நீங்கள் ஒரு நாள் முழுக்கப் படப்பிடிப்பில் இருக்கலாம். என்ன பெயர் முடிவாகிறது என்பது சிம்புவின் பிறந்த நாளன்று அறிவிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு