

வி.ராம்ஜி
தமிழ் சினிமாவில், சினிமா எனும் கலையைக் காக்கவும் மக்களை மகிழ்விக்கவும் ஆபத்பாந்தவனாக ஒருவர், ஒவ்வொரு தருணத்திலும் வந்துகொண்டே இருப்பார். தியாகராஜ பாகவதார், சின்னப்பா, கிட்டப்பா என்றெல்லாம் ஆரம்பித்த அந்தப் பட்டியலில்... இடம் பிடித்தார் அந்த நடிகர். ஆனால், அவரை சாதாரணராக, நடிகராக மட்டுமே பார்க்கவில்லை மக்கள். உண்மையிலேயே ஆபத்பாந்தனாகத்தான் பார்த்தார்கள்; பூரித்தார்கள்; புளகாங்கிதம் அடைந்தார்கள். தேவதூதனாகப் பார்த்தார்கள். தேவனாகவே கூட பார்த்தார்கள். அவர்... எம்ஜிஆர்.
எம்ஜிஆரைப் போல் ஒரு மாஸ் ஹீரோ எவருமில்லை. ஆனால் எம்ஜிஆர், எடுத்த எடுப்பிலேயே ஹீரோ இடத்துக்கு வந்துவிடவில்லை. சின்னச்சின்ன கேரக்டர்களில் தொடங்கிய திரைப்பயணம் அது. கொஞ்சம்கொஞ்சமாகத்தான் வளர்ந்தார். பின்னாளில், மொத்தத் திரையுலகையும் சின்னவர் என எல்லோரும் அழைக்கும் வகையில், பெரியவராக இருந்து தன் கைக்குள் வைத்துக்கொள்வோம் என்று எம்ஜிஆரே நினைத்திருக்கமாட்டார்.
பின்னாளில், கதையில் கவனம் செலுத்தினார். காட்சிகளைக் கவனித்தார். வசனங்களைத் திருத்தினார். பாடல்களின் முக்கியத்துவத்தை இவரளவுக்கு உணர்ந்தவர்கள் இல்லை. மக்களின் ரசனையை ‘பல்ஸ்’ பிடிப்பதில் முதன்மையானவராகவும் வல்லவராகவும் இருந்தார். தத்துவார்த்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். காதலுக்கும் வீரத்துக்கும் இன்னும் முக்கியத்துவம் கொடுத்தார். தத்துவமும் காதலும் வீரமும் எம்ஜிஆரின் அடையாளங்களாகப் பேசப்பட்டன. இந்த அடையாளங்கள்தான், எம்ஜிஆர் ஃபார்முலாவாயிற்று.
பெற்றவர்களை மதிப்பார். ஊரிலிருந்து வீட்டுக்கு வந்தகையுடன் அம்மாவின் காலில் விழுந்து வணங்குவார். தாய் சொல்லைத் தட்டமாட்டார். ஊரில் ஏதும் பிரச்சினை என்றால், தட்டிக்கேட்பது, பெண்களுக்கு ஏதேனும் பங்கமெனில், ஓடோடி வந்து உதவுவது, அநியாயத்தைக் கண்டு கொதிப்பது, வில்லனின் கூடாரத்தைக் கண்டறிவது, கெட்டவர்களை அழிப்பது என்று எம்ஜிஆர் செய்ததெல்லாம் எம்ஜிஆர் ஸ்டைலாயிற்று. எம்ஜிஆர் ஃபார்முலாயிற்று. அதுதான் சக்ஸஸ் ஃபார்முலாயிற்று.
படத்துக்கு ஒருபாடலாவது என்றைக்கும் நிலைத்திருக்கும் பாடலாக அமையவேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால், ஒரு படத்தின் பாடல்கள் அனைத்தையும் நிலைத்திருக்கும் பாடல்களாகக் கொடுக்கவேண்டும் என்பதில் கவனமாக இருந்தார் எம்ஜிஆர். அதை சாதித்தும் காட்டினார்.
டபுள் ஆக்டிங் ரோலுக்கு ஓர் இலக்கணத்தை வைத்தவரும் எம்ஜிஆராகத்தான் இருப்பார். டபுள் ஆக்டிங்கில் வெரைட்டி காட்டுகிற அவசியமெல்லாம் இல்லாமல், அதற்கொரு ஸ்டைலீஷையும் உண்டுபண்ணினார்.
எம்ஜிஆரின் திரையுலகப் பயணத்தில் எம்ஜிஆரின் வெற்றி, இவற்றில் மட்டும்தானா என்ன? உடன் பணிபுரிவோரிடம் அன்பாகப் பழகியதும் ஆபத்துக்கு உதவியதும் அவரை சின்னவர் என்றும் வள்ளல் என்றும் கொண்டாட வைத்தது.
‘எம்ஜிஆர் வீட்டுக்கு யார் போனாலும் முதலில் அவர்களுக்கு வயிறாரச் சாப்பாடு போடுவதுதான் எம்ஜிஆரின் வழக்கம். எத்தனையோ பேர், எம்ஜிஆரிடம் உதவி கேட்க வந்து, சொல்லத் தயங்கி, அவர்களின் தயக்கத்தை அறிந்து உணர்ந்து உதவி செய்யும் அவரின் வள்ளல் குணம்தான் இன்றைக்கும் எல்லோரையும் கொண்டாடவைக்கிறது என்கிறார்கள் எம்ஜிஆரின் ரசிகர்கள்.
எம்ஜிஆர், மறைந்தாலும் இறந்து பல வருடங்களாகிவிட்டாலும் இன்றைக்கும் எம்ஜிஆரின் குணத்தைச் சொல்லவும் அவரின் கருணையையும் கனிவையும் சொல்லிச் சொல்லிப் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
அதுதான் எம்ஜிஆர். அதுதான் வள்ளல் எம்ஜிஆர்.
இன்று எம்ஜிஆர் (17.1.2020) பிறந்தநாள். அந்த உன்னதத் தலைவரை, ஒப்பற்ற மனிதரைப் போற்றுவோம்!