

மனைவியின் பிரிவு, மது போதைக்கு அடிமை ஆகியவற்றிலிருந்து உடற்பயிற்சியின் மூலம் மீண்டதை விஷ்ணு விஷால் கடிதம் மூலம் பகிர்ந்துள்ளார். அதற்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
2019-ம் ஆண்டு படப்பிடிப்பின்போது விபத்து ஒன்றில் சிக்கினார் விஷ்ணு விஷால். இதனால் ஓய்வில் இருந்தவர், தற்போது தன் உடலமைப்பை முழுமையாக மாற்றி 'எஃப்.ஐ.ஆர்' படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இதனிடையே தனது வாழ்க்கையின் கடினமான தருணங்களை எப்படியெல்லாம் கடந்து வந்தேன் என்பதை வெளிப்படையாக 2 பக்கம் கடிதமாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.
அந்தக் கடிதத்தில் விஷ்ணு விஷால் கூறியிருப்பதாவது:
''இன்று நான் என்னைப் பற்றி சில விஷயங்களைப் பகிர விரும்புகிறேன். எல்லோருடைய வாழ்க்கையைப் போல எனது வாழ்க்கைப் பயணமும் இதுவரை ஏற்ற இறக்கங்களுடனேயே இருந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகள் மிகவும் கடினமாக இருந்தது. எனது பணி ரீதியாக எல்லாம் சுமுகமாகச் சென்றாலும், என் தனிப்பட்ட வாழ்வில் சரிவுகள் இருந்தன.
2017-ல் நானும் எனது மனைவியும் பிரிந்தோம். 11 ஆண்டு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வந்தது. இந்தப் பிரிவால் இருவரும் வெவ்வேறு வீடுகளில் வாழ்ந்தோம். இதனால் என் மகனுடனான நெருக்கம் குறைந்தது. என் மனைவி இப்படிச் செய்வார் என நான் நினைக்கவில்லை. அதனால் நான் மதுவுக்கு அடிமையானேன். ஒவ்வோர் இரவும் மூழ்கும்வரை நான் மது போதைக்கு அடிமையானேன். மன அழுத்தமும், தூக்கமின்மையும் என்னை உடல் ரீதியாகப் பலவீனமாக்கியது. சிறிய அறுவை சிகிச்சை வேறு செய்துகொண்டேன்.
தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்குள் வேலைப் பளுவும் அதிகரிக்கத் தொடங்கியது. நான் தொடங்கிய தயாரிப்பு நிறுவனமும் பிரச்சினைகளைச் சந்தித்தது. எனக்கு ஏற்பட்ட நிதிப் பிரச்சினையால் என் தயாரிப்பில் உருவாகி வந்த படத்தை வெறும் 21 நாளிலேயே கைவிட்டேன். பிரபு சாலமன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்பட படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம் என்னை இரண்டரை மாதம் படுக்கையில் தள்ளியது. அதனால் 11 கிலோ எடை கூடியது.
சூழ்நிலைக் கைதி போல் உணர்ந்தேன். எல்லாமே எனக்கு எதிராகச் சென்றது. இதனால் 8 அருமையான வாய்ப்புகளை இழந்தேன். விவாகரத்து, குழந்தையின் பிரிவு, உடல் பிரச்சினைகள், நிதி இழப்புகள், காயம், குடிப்பழக்கம், உணவுப் பழக்கங்களில் சீர்கேடு என சிக்கித் தவித்தேன்.
இந்தக் களேபரங்களில் நான் எனது தந்தையின் பணி ஓய்வை மறந்துவிட்டேன். எனது தனிப்பட்ட வாழ்க்கையால் எனது குடும்பத்தினர் குறிப்பாக எனது தந்தை எவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தார் என்பதைக் காணத் தவறிவிட்டேன். அதனால், நான் என்னை அடக்கி ஆள முடிவு செய்தேன்.
அதனால் மன அழுத்தத்துக்குச் சிகிச்சை பெற்றேன். உடலை வலுப்படுத்தப் பயிற்சியாளரை நியமித்து ஒழுங்காகப் பயிற்சிகளை மேற்கொண்டேன். உணவுப் பழக்கவழக்கங்களை ஆரோக்கியமாக வடிவமைத்தேன். மது அருந்துவதைக் கட்டுக்குள் கொண்டு வந்தேன். யோகா பயின்றேன். எனது சமூக வலைதளங்களில் எதிர்மறை மனம் கொண்டவர்களைத் தவிர்த்தேன். சில நெருங்கிய நண்பர்களை மட்டும் அருகில் வைத்துக்கொண்டு எனது வாழ்க்கையிலும் தொழிலிலும் கவனம் செலுத்தி வருகிறேன்.
காயத்துக்குப் பின்னர் ஜிம் கூடாது என்றார்கள். ஆனால், நான் ஜிம்முக்குச் சென்றேன். முதல் நாள் ஒரு புஷ் அப் கூடச் செய்ய முடியவில்லை. இதோ 6 மாதங்கள் கடந்த நிலையில் பழையபடி வலுவாக இருக்கிறேன். என்னைப் போன்றே வாழ்க்கையில் அடிபட்டவர்கள் நிறைய பேர் இருக்கலாம். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது நேர்மறையாகச் சிந்தியுங்கள். மீண்டு வாருங்கள். உங்களை நீங்களே ஒழுங்குபடுத்துங்கள் என்பதே.
உடல் நலன் எப்போதுமே மன நலத்தை மேம்படுத்தும். இதனை நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்துள்ளேன். எதிர்காலம் எனக்கு என்ன வைத்திருக்கிறது என்று தெரியாது. ஆனால், நான் என் உடலையும் மனதையும் நலமாக வைத்திருப்பேன். அப்படி இருந்தால் எதையும் எதிர்கொள்ளலாம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். உங்களின் சோதனைக் காலங்களில் நிறைய பேர் உங்களுக்கு எதிராகத் திரண்டு உங்களைக் கீழே அழுத்துவார்கள். அப்போதெல்லாம் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். என்ன நேர்ந்தாலும் நீங்கள் உங்கள் மனசாட்சிக்கும் குடும்பத்துக்கும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் பதில் சொன்னால் போதும். உங்களைச் சாடியவர்கள் முன்னால் முன்பை விட சிறப்பாக வாழ்ந்து காட்டுங்கள்.
உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான உடலும், அமைதியான மனமும் இறைவன் அருளட்டும். எனது கடின காலங்களில் என்னை ஆதரித்தவர்களுக்கு நன்றி''.
இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
வெளிப்படையாக இருந்ததற்கும், கடினமான பயணத்தைக் கடந்து வந்ததற்காகவும் விஷ்ணு விஷாலைப் பாராட்டி வருகிறார்கள். மேலும், 'வாரணம் ஆயிரம்' தருணம் என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர்.