

தனுஷ் வழங்கிய வாய்ப்புகள் குறித்து ஸ்டைலிஸ்ட் கலைஞர் தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தனுஷ், ஜி.வி.பிரகாஷ், சந்தானம் தொடங்கி பல்வேறு நாயகர்கள், நாயகிகளுக்குச் சிகை அலங்காரம் செய்பவராக இருப்பவர் தேவ். தனுஷ் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அசுரன்' படத்தில் அவரது இரண்டு தோற்றங்களின் வடிவமைப்பை தேவ் தான் முடிவு செய்தார்.
சமீபத்தில் நடைபெற்ற 'அசுரன்' படத்தின் 100-வது நாள் விழாவில் தேவுக்கும் விருது வழங்கப்பட்டது. இந்த விருது பெற்ற புகைப்படத்தினை தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்து, அதனுடன் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் தேவ்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''சிறு வயதிலிருந்தே விளையாட்டு உள்ளிட்ட ஏதாவது ஒரு துறையில் விருது வெல்ல வேண்டும் என்பது என் கனவு. ஆனால், எனது கடும் ஆர்வத்தையும், எனது தந்தையின் வலிமையான ஆதரவையும் மீறி நான் சாதிக்க நினைத்த அனைத்துத் துறைகளிலும் சுமாரான திறமையே எனக்கு இருந்தது.
நான் பல விஷயங்களில் திறமையானவன் இல்லை என்பதையே அனைத்து அனுபவங்களும் பொதுவாக எனக்குக் கற்றுத் தந்தன. இதை நான் பல நாட்கள் உணராமல் இருந்திருக்கிறேன். நான் தோற்றுப்போனவன் மட்டுமே. ஆனால்ம் எப்போது இந்த ஸ்டைலிஸ்ட் துறைக்குள் வந்தேனோ அப்போது இந்த இடத்துக்கு நான் 100 சதவீதம் பொருத்தமானவன் என்றும், என்னால் என்னை நிரூபிக்க முடியும் என்றும் என் உள்ளுணர்வு சொன்னது.
ஒருவர் சிறந்து விளங்க எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அவர்களை நிரூபிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும். எனது கனவை நனவாக்க வைரமான வாய்ப்பு தனுஷின் வடிவத்தில் வந்தது. அவர் இல்லையென்றால், அவர் என் மீது நம்பிக்கை வைக்கவில்லையென்றால் என்னால் என் துறையில் இப்போது இருக்கும் நம்பிக்கையான நிலையில் மூன்றில் ஒரு பங்கு கூட இருந்திருக்க முடியாது.
என்னை அங்கீகரித்த தனுஷுக்கு இந்தத் தருணத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். என் பெருமை, என் பணி, இந்த கவுரவத்தைப் பெற நான் கடந்து வந்த நீண்ட பயணம் ஆகியவற்றுக்கான சின்னமாக இந்த விருதைப் பார்க்கிறேன். என்னால் முடியுமென்றால், நம்புங்கள், யாராலும் முடியும்”.
இவ்வாறு தேவ் தெரிவித்துள்ளார்.