

ரஜினியின் பாராட்டு மற்றும் அடுத்து தன் நடிப்பில் வெளியாகும் படங்கள் குறித்து நடிகர் வெற்றி, பேட்டியில் தெரிவித்துள்ளார்.
'8 தோட்டாக்கள்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் வெற்றி. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 'ஜீவி' படத்தில் நடித்தார். இந்தப் படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்ததால், தற்போது நம்பத்தகுந்த ஹீரோக்கள் பட்டியலில் இணைந்துள்ளார் வெற்றி.
தற்போது தனது அடுத்த படங்கள் குறித்து அளித்துள்ள பேட்டியில் வெற்றி கூறியிருப்பதாவது:
'' 'கேர் ஆஃப் காதல்' படத்தில் நடிக்கிறேன். இப்படம் 'கேர் ஆப் கச்சிராப்பலம்' என்ற தெலுங்குப் படத்தின் மறு உருவாக்கம். இப்படத்தை ஹேமம் பார் இயக்குகிறார். காதலை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 'இறுதிச்சுற்று' படத்தில் நாயகிக்கு அக்காவாக நடித்த மும்தாஜ் எனக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் எனது கதாபாத்திரத்தின் பெயர் தாடி. பிப்ரவரி மாதத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.
இந்தப் படத்திற்குப் பிறகு 'வனம்' படம் வெளியாகும். 'தடம்' படத்தின் நாயகியாக நடித்த ஸ்ம்ருதி இந்தப் படத்திலும் நாயகியாக நடிக்கிறார். கலைக் கல்லூரியில் சிற்பக் கலை பயிலும் மாணவனாக நடிக்கிறேன். பூர்வ ஜென்மத்தை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. மூணாறு அருகே உள்ள காட்டில் படப்பிடிப்பு நடந்தது. இப்படத்தின் இறுதிக் காட்சிக்காக வித்தியாசமான முறையில் சண்டைக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அக்காட்சி அனைவரிடத்திலும் பேசப்படும்.
அடுத்ததாக, குரு ராமானுஜம் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. முதல் இரண்டு படங்களிலும் கதைக்குத் தேவைப்படாததால் நெருக்கமான காதல் காட்சிகளில் நடிக்கவில்லை. முதலில் நான் கதை கேட்பேன். எனக்குப் பிடித்திருந்தால் சம்மதம் தெரிவிப்பேன். சிறிது குழப்பமாக இருந்தால் எனது சகோதரர் மற்றும் அப்பாவுடன் கதை கேட்டு முடிவு செய்வேன்.
பல கதைகள் கேட்டு அவற்றில் 5 கதைகளைத் தேர்வு செய்திருக்கிறேன். இதன் பிறகு சொந்தத் தயாரிப்பில் ஈடுபடுவேன். இயக்கத்தில் ஆர்வம் இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு இல்லை. '8 தோட்டாக்கள்' பார்த்து ரஜினிகாந்த் பாராட்டினார். 'ஜீவி' பார்த்து விவேக் பாராட்டினார். இரண்டுமே மறக்க முடியாத பாராட்டுகள். எனக்கு ரோல் மாடல் என்று யாருமில்லை. எனக்குள்ள திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு நடித்து வருகிறேன்”.
இவ்வாறு வெற்றி தெரிவித்துள்ளார்.