

'மாஸ்டர்' படத்தின் மூலமாக வியாபார முறையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளார் விஜய்.
'பிகில்' படத்தின் பிரம்மாண்டமான வசூலை முன்வைத்து, 'மாஸ்டர்' படத்தின் வியாபாரம் நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், யாருமே எதிர்பாராத வண்ணம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு 'மாஸ்டர்' படத்தின் விநியோக வியாபாரம் நடைபெற்றது உறுதியாகியுள்ளது.
தமிழக விநியோக உரிமை, கேரள விநியோக உரிமை, தெலுங்கு விநியோக உரிமை, கன்னட விநியோக உரிமை, வெளிநாட்டு விநியோக உரிமை, தொலைக்காட்சி உரிமை, டிஜிட்டல் உரிமை, இசை உரிமை என அனைத்தும் சேர்த்து சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரத்தை நடத்தி முடித்துள்ளது 'மாஸ்டர்' படக்குழு.
அனைத்தும் யார் யாருக்கு என்பதைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டதால், எவ்விதப் பிரச்சினையுமே இல்லாமல் படம் வெளியாவது உறுதியாகிவிட்டது. இந்த அளவுக்கான பிரம்மாண்ட வியாபாரம் ரஜினி படங்களுக்குத்தான் நடக்கும். தற்போது 'பிகில்' படத்தைத் தொடர்ந்து 'மாஸ்டர்' படத்துக்கும் நடந்துள்ளதால், ரஜினிக்கு நிகரான வியாபார முறைக்கு வந்துவிட்டார் விஜய் என்கிறார்கள்.
இதனாலேயே, தனது அடுத்த படத்துக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் என்று தெரிவித்துள்ளார் விஜய். இதற்கு சம்மதம் தெரிவித்து ஒரு பெரும் தொகையை அட்வான்ஸ் கொடுத்து தேதிகள் வாங்கியுள்ளது சன் பிக்சர்ஸ். தற்போது இந்தப் படத்தை யார் இயக்கவுள்ளார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் - விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தான் இப்போது படமாக்கி வருகிறது படக்குழு.
தணிக்கைப் பணிகள் முடிந்தவுடன் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவிக்கும். அது கண்டிப்பாக ஏப்ரல் 9-ம் தேதியாகத்தான் இருக்கும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.