

‘சித்தி 2’ சீரியலின் இரண்டாம் பாகம், வருகிற 27-ம் தேதி முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.
சீரியல் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதில் ‘சித்தி’ சீரியலுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. பலரையும் சீரியல் பக்கம் திருப்பியதோடு, குறிப்பிட்ட ஆண்களைக் கூட சீரியல் பார்க்கும் பழக்கத்துக்கு மாற்றிய பெருமை ‘சித்தி’ சீரியலையே சேரும்.
சி.ஜெ.பாஸ்கர் இயக்கிய இந்த சீரியலில், பிரதான பாத்திரத்தில் ராதிகா சரத்குமார் இரண்டு வேடங்களில் நடித்தார். அவருடன் சேர்ந்து சிவகுமார், தீபா வெங்கட், சுபலேக சுதாகர், யுவராணி, விஜய் ஆதிராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
சீரியலின் டைட்டிலைப் போடும்போது ஒலிக்கும் ‘சித்தி’ என்ற குழந்தையின் குரலும், ‘கண்ணின்மணி கண்ணின்மணி நிஜம் கேளம்மா’ என்ற டைட்டில் பாடலும் இன்றளவும் பிரபலம். வைரமுத்து எழுதிய இந்தப் பாடலை, எஸ்.பி.பி. மற்றும் நித்யஸ்ரீ மஹாதேவன் இருவரும் பாடினர். தினா இசையமைத்தார்.
1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20-ம் தேதி ஒளிபரப்பைத் தொடங்கிய இந்த சீரியல், 2001-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி தனது இறுதி எபிசோடை நிறைவு செய்தது. மொத்தம் 467 எபிசோடுகள் ஒளிபரப்பாயின. இந்த சீரியல் ரடான் நிறுவனத்தின் யூ ட்யூப் பக்கத்தில் இருப்பதால், இப்போதும் அந்த சீரியலைப் பார்த்து ரசிப்பவர்கள் உள்ளனர்.
இந்நிலையில், ‘சித்தி’ சீரியலின் இரண்டாம் பாகம் வருகிற 27-ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இரவு 9 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில், ராதிகா சரத்குமார் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். இதன் ப்ரமோ, நேற்று வெளியிடப்பட்டது.