

'அசுரன்' விழாவில் பேசியது சர்ச்சையானதைத் தொடர்ந்து, விஜய்யிடம் மன்னிப்பு கோரியுள்ளார் நடிகர் பவன்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அசுரன்'. இந்தப் படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் பவன் பேசும்போது, "ஒரு படத்துக்கு 100-வது நாள் விழா என்பது ரொம்பவே அரிதாக நடக்கிறது.இதற்கு முன்பு 'குருவி' படத்தின் 150-வது நாள் விழாவில்தான் கலந்து கொண்டேன். அது எந்தளவுக்கு உண்மையென்று தெரியவில்லை. எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. " என்று பேசினார். அப்போது மேடையிலிருந்தவர்கள் மத்தியில் பயங்கர சிரிப்பலை எழுந்தது.
பவனின் இந்தப் பேச்சு, விஜய் ரசிகர்களைக் கடுமையாகக் கோபத்துக்கு உள்ளாக்கியது. பலரும் அவரை கடுமையாகத் திட்டத் தொடங்கினார்கள்.
இந்நிலையில் தனது பேச்சு தொடர்பாக மன்னிப்பு கோரியுள்ளார் பவன்.
இது தொடர்பாக பவன் அளித்துள்ள பேட்டியில், "பிரபலமாக வேண்டும் எனப் பேசவில்லை. முதலில் விஜய் சார், இயக்குநர் தரணி மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மற்றவர்களைப் புண்படுத்த வேண்டும் என்று பேசவில்லை. எந்தவொரு நிகழ்ச்சிக்கு அழைத்தாலும், என்னைப் பேச வைக்காதீர்கள் என்பேன். ஏனென்றால் தெரியாமல் ஏதேனும் பேசிவிடுவேன்.
நான் பேசியது தவறுதான். எப்போதுமே ஜாலியாகப் பேசுவேன். அந்த மேடையில் கூட இவர் ஏதேனும் பேசிவிடுவாரா என்று தான் தனுஷ் - வெற்றிமாறன் இருவரும் பயந்தார்கள். நான் திவீரமான விஜய் ரசிகன். ’குருவி’ படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளேன். அவருடன் நடிக்கும்போது நேரிலேயே சில விஷயங்கள் சொல்லியிருக்கிறேன்.
'என்ன அண்ணா படம் இது.. பாதியிலேயே எழுந்து வந்துவிட்டேன்' என்று சில படங்கள் சொன்னேன். அதேபோல் இதெல்லாம் நல்ல படங்கள் ஏன் சரியாகப் போகவில்லை என்று தெரியவில்லை எனவும் விஜய் சாரிடம் சொன்னேன். ஒளிவுமறைவு இல்லாமல் நேரடியாகப் பேசிவிடுவேன். ஆனால், மேடையில் பேசும்போது நான் கவனமாகப் பேசியிருக்க வேண்டும். படம் பெயர் சொன்னது தான் இவ்வளவு பெரிய பிரச்சினையாகிவிட்டது. அனைவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் பவன்.