

'வானம் கொட்டட்டும்' படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சியில், ரசிகர்கள் 'மாஸ்டர்' அப்டேட் என கத்தவே அதிலிருந்து சாதுரியமாக நழுவிக் கொண்டார் சாந்தனு.
மணிரத்னம் தயாரிப்பில் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வானம் கொட்டட்டும்'. சரத்குமார், ராதிகா சரத்குமார், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். சித் ஸ்ரீராம் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனைத்துமே முடிவுற்று, படத்தின் விளம்பரப்படுத்துதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் முதலாவதாக நேற்று (ஜனவரி 14) லயோலா கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் 'வானம் கொட்டட்டும்' படக்குழு கலந்து கொண்டது. இதில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது, சாந்தனு பேசுகையில் "மாஸ்டர்" என கத்திக் கொண்டே இருந்தார்கள். இதனால் ஒரு கட்டத்தில் அவரால் பேச முடியாத சூழல் ஏற்பட்டது. பின்பு "இங்கு நான் 'மாஸ்டர்' பற்றி பேசினால், மெட்ராஸ் டாக்கீஸில் இன்னும் பணம் வரவேண்டியதுள்ளது. அதை கட் பண்ணிவிடுவார்கள். 'மாஸ்டர்' மற்றும் தளபதி அண்ணாவைப் பற்றி அப்புறமாகப் பேசுகிறேன்" என்று நைசாக நழுவிக் கொண்டார்.