

கேரளாவில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஒரு திரையரங்கில் சுறா திரைப்படம் மீண்டும் வெளியாகிறது.
கேரளாவில் விஜய் படங்களுக்கு, தமிழ்நாட்டுக்கு நிகரான வரவேற்பு உள்ளது. இங்கிருப்பது போலவே அங்கும் விஜய்க்கு எண்ணற்ற ரசிகர் மன்றங்கள் உள்ளன. விஜய் 2010-ஆம் ஆண்டு நடித்த ’சுறா’ திரைப்படம், கேரளாவில் கொல்லத்தில் இருக்கும் ஜி மேக்ஸ் திரையரங்கில் ஜனவரி 26 அன்று மீண்டும் வெளியாகிறது.
விஜய்யின் 50-வது படமான ’சுறா’, இந்த தசாப்தத்தில் மறு வெளியீடாக வரும் முதல் விஜய் திரைப்படம் என விஜய் ரசிகர்கள் இந்தச் செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். இந்த மறு வெளியீட்டுக்கான டிக்கெட்டுகளை புகைப்படம் எடுத்தும் சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
எஸ்பி ராஜ்குமார் இயக்கியிருந்த இந்தப் படத்தில் தமன்னா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மணிசர்மா இசையமைத்திருந்தார். ஆனால் வெளியான சமயத்தில் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்ற ’சுறா’ எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
’பிகில்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, ’மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா என இரண்டு நாயகிகள் நடிக்கும் இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.