

வி.ராம்ஜி
ரஜினியின் ‘தர்பார்’ வெளியாகி சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கிய சந்தோஷத்தில் இருக்கிறார். இதே சந்தோஷம், 19 வருடங்களுக்கு முன்பும் கிடைத்தது. அந்த குதூகலத்துக்குக் காரணம்... ‘தீனா’. அஜித் நடித்த ‘தீனா’.
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜின் நண்பர் பழனிச்சாமி, விஜயம் சினி கம்பைன்ஸ் எனும் பேனரில் படங்கள் தயாரித்து வந்தார். பழனிச்சாமியின் மகன் கார்த்திக், அஜித்துக்கு நண்பர். அஜித்தின் ஆரம்பக்காலத்தில், தங்களின் பேனரில் ‘ரெட்டைஜடை வயசு’ படத்தை எடுத்தார்கள். சுமாராகத்தான் போனது.
பிறகு, வளர்ந்துவிட்ட நிலையில், அந்தக் கம்பெனிக்கு படம் செய்துகொடுக்க கார்த்திக்கை அழைத்தார் அஜித். அப்போது பலமுறை வந்து கதை சொன்னவரை இயக்குநராக்குவது என முடிவு செய்தார் அஜித். விஜயம் சினி கம்பைன்ஸ் நிறுவனத்துக்காக, தன் நண்பர் கார்த்திக்கிற்காக, அஜித் செய்த படம்தான் ‘தீனா’. அந்தப் படத்தின் மூலம் அஜித் இயக்குநராக்கினார் ஒருவரை! அவர்தான்... ஏ.ஆர்.முருகதாஸ். அவசரம் அவசரமாக முருகதாஸை அழைத்து, பாக்கெட்டில் இருந்து ஆயிரம் ரூபாயை அட்வான்ஸாகக் கொடுத்து ஓகே செய்து, அலுலகத்துக்கு வாழ்த்தி அனுப்பினார் அஜித்.
சாக்லெட் பாய் என்று ‘ஆசை’ படத்திலிருந்தே அஜித்துக்கு அப்படியான பெயர் உண்டு. ‘வான்மதி’, ‘காதல்கோட்டை’, ‘ராசி’, ‘நேசம்’, ‘மைனர் மாப்ளே’ என்று அஜித் நடித்த படங்களும் இளமைக் குறும்பும் குசும்புமான கேரக்டர்களாகத்தான் அமைந்தன. இந்த சமயத்தில், இயக்குநர் சரண் ‘அமர்க்களம்’ படத்தில் அஜித்தை ஆக்ஷன் ஹீரோவாக்கினார். அதுவொரு ஆக்ஷன் ஆரம்பம். இதையடுத்து, அந்த ஆக்ஷனுக்கு வலு சேர்க்கிற விதமாக முருகதாஸ் கொடுத்ததுதான் ‘தீனா’.
கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு வந்து, கலைமணி உள்ளிட்டவர்களிடம் உதவியாளனாக இருந்து, சினிமாவை உள்வாங்கி, அஜித் மூலமாக திரையுலகில் இயக்குநர் அவதாரம் எடுத்தார் முருகதாஸ். பார்த்தால், இயக்குநரின் முதல் படம் போல் இருக்காது. தேர்ந்த இயக்குநரின் தெளிவான படம் போல், காட்சிகள் வைத்து அசத்தியிருப்பார்.
சில படம் காதலைச் சொல்லும். சில படங்கள் ஆக்ஷனில் அலப்பறையைக் கொடுக்கும். முருகதாஸின் முதல் படமான ‘தீனா’, காதலைக் கவிதையாய்ச் சொல்லிற்று. ஆக்ஷனை அதிரிபுதிரியாய் காட்டிற்று.
அஜித், லைலா, சுரேஷ்கோபி, மகாநதி சங்கர், ஸ்ரீமன், பாலாசிங், ராஜேஷ் முதலானோர் நடித்திருந்தனர். சுரேஷ்கோபியின் தம்பியாக அஜித். நிஜத்தம்பி இல்லை. வளர்ப்பில் அப்படி. அவர்களுக்கு ஒரு தங்கை. அந்தத் தங்கை மீது உயிரையே வைத்திருப்பார் அஜித். அடிதடி, வெட்டு குத்து, பஞ்சாயத்து... இதுதான் தொழில் இவர்களுக்கு. இதுவொரு போர்ஷன்.
படத்தின் நாயகி லைலா. துறுதுறுவென கலகலவென இருப்பார். அஜித்தை கண்டக்டராக நினைத்துக் கொள்வார். அப்புறம் காய்கறி விற்பவராக நினைத்துக் கூப்பிடுவார். இப்படியான சந்திப்புகள், இருவருக்கும் காதலை வளர்க்கும். இதுவொரு போர்ஷன்.
லைலாவின் அண்ணனும், அஜித்தின் தங்கையும் காதலிக்க... வீட்டை விட்டு ஓடிப்போகிறவர்களை மடக்கிப் பிடிக்க, அப்போது விபத்து நேர்ந்துவிடும். இதில் தங்கை இறந்துவிடுவாள். அவளின் காதலன் பலத்த காயங்களுடன் பிழைத்துக் கொள்வான்.
தங்கையின் காதல் அஜித்துக்குத் தெரியும். சுரேஷ்கோபிக்குத் தெரியும். இதுதான் இருவருக்குமான பிரிவைக் கொடுக்கும். லைலாவின் அண்ணனைப் போட்டுத்தள்ள சுரேஷ்கோபியின் ஆட்கள் துடிக்க, அதைத் தடுக்கும் முயற்சியில் அஜித் இருக்க... க்ளைமாக்ஸில், விவரங்கள் தெரிந்து அஜித்துடன் இணைகிறார் சுரேஷ்கோபி.
பக்கா கமர்ஷியல் பேக்கேஜில், பி அண்ட் சி ரசிகர்களை டார்கெட் செய்து, கோல் அடித்தார் முருகதாஸ். படத்தில் எல்லாப் பாடல்களும் செம ஹிட்டு. யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தின் வெற்றிக்கு கூடுதல் வலுவாக அமைந்தன. வசனங்களும், ஒரு ஆக்ஷன் படத்துக்கு எப்படியெல்லாம் இருக்கவேண்டுமோ, மாஸ் ஹீரோவுக்கு எந்த வகையில் இருக்கவேண்டுமோ அப்படித்தான் இருந்தன.
இன்றைக்கு அஜித்தின் ரசிகர்கள் ‘தல’ என்று அழைக்கிறார்கள். இதற்கு அச்சாரம் போட்டது ‘தீனா’ படம்தான். ’வத்திக்குச்சி பத்திக்காதுடா’ பாடலும் பாடலுக்கு நக்மா ஆடியதும் அப்போது பேசப்பட்டது. அந்தப் பாடலில், மகாநதி சங்கர் ‘தல’ என்பார் அஜித்தை. ’தல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது’ என்பார். பின்னாளில், அஜித்துக்கு ‘தல’ எனும் அடைமொழி ஒட்டிக்கொள்ளும் என ஏ.ஆர்.முருகதாஸோ மகாநதி சங்கரோ ஏன்.. அஜித்தோ கூட நினைத்திருக்கமாட்டார்கள்.
காதல், காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் என கலந்துகட்டி அசத்தினார் முருகதாஸ். 2001ம் ஆண்டு, ஜனவரி 14ம் தேதி, ‘தீனா’ வெளியானது. கிட்டத்தட்ட 19 வருடங்களாகிவிட்டன.
ஆக, ‘தீனா’ வந்து 19 வருடங்களாகிவிட்டன. முருகதாஸ் இயக்குநராகி 19 வருடங்களாகிவிட்டன. அஜித்துக்கு ‘தல’ பட்டம் கிடைத்தும் இத்தனை வருடங்களாகிவிட்டன.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் டீமிற்கும், ‘தல’ அஜித்துக்கும் ஸ்பெஷல் பூங்கொத்துகள்!