இதில் நான் நடிச்சுருக்கணும்: தாணுவிடம் கூறிய ரஜினி

இதில் நான் நடிச்சுருக்கணும்: தாணுவிடம் கூறிய ரஜினி
Updated on
1 min read

'அசுரன்' படத்தில் தனுஷ் கேரக்டரில் நான் நடித்திருக்க வேண்டும் என்று ரஜினி தெரிவித்ததாக தாணு குறிப்பிட்டார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அசுரன்'. பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம் 100 நாட்களைக் கடந்துள்ளது. இதனால், 100 நாட்கள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டார்கள். அனைவருக்கும் 100-வது நாள் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய அனைவரும் இயக்குநர் வெற்றிமாறனுக்கும், தனுஷுக்கும் நன்றி தெரிவித்தார்கள்.

இந்த விழாவில் தயாரிப்பாளர் தாணு பேசும் போது, "'வேலையில்லா பட்டதாரி 2' படப்பிடிப்பின் போது தனுஷ் சார் அழைத்து, வெற்றிமாறன் சாரோடு ஒரு படம் பண்றேன். அதைப் பேசி முடிவு பண்ணுங்கள் என்றார். வெற்றிமாறனோடு பழகிய விதம், பணியாற்றிய விதம் மறக்க முடியாது. எஸ்.பி.முத்துராமனுக்குப் பிறகு என் இதயத்தைக் கொள்ளைக் கொண்ட தம்பி வெற்றிமாறன்.

இரவு - பகல் பாராமல் உழைத்த உழைப்பிற்கு, என் கண்கள் பனித்த வெற்றியை அவருக்கு காணிக்கையாக்குகிறேன். காலம் காலமாக என் நன்றியை நிரூபித்துக் கொண்டே இருப்பேன். தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி தொடர் வெற்றிக்குச் சொந்தக்காரர்கள். தம்பி தனுஷ் ஒரு கடினமான உழைப்பாளி. சிவாஜி சார் உயிரோடு இருந்திருந்தால் அவரைத் தான் இந்த மேடையில் உட்கார வைத்திருப்பேன். இன்று உலகமே தனுஷின் நடிப்பைப் பாராட்டிவிட்டது. நடிகர் திலகத்துக்குப் பிறகு நான் பார்த்து வியந்த ஒரே நடிகர் தனுஷ் தான். இதை ரஜினி சாரிடம் கூட சொல்லியிருக்கேன்.

இந்தப் படத்தில் தனுஷ் சார் ஊரில் இருப்பவர்கள் காலில் எல்லாம் விழுவார். அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு இந்தக் கேரக்டரில் நான் நடித்திருக்கணும் என்று ரஜினி சார் சொன்னார். இடைவேளைக் காட்சியைப் பார்த்துவிட்டு 'பாட்ஷா.. பாட்ஷா' என்று என்னை அறியாமல் கைத்தட்டிவிட்டேன் என்றார். இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அனைத்து கதாபாத்திரத்துக்கும் நடிகர்கள் முடிவு செய்துவிட்டார்கள். ஆனால், கென் கருணாஸ் கதாபாத்திரத்துக்கு அவர் தான் வேண்டும் எனச் சொல்லிவிட்டார்கள்" என்று பேசினார் தயாரிப்பாளர் தாணு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in