

ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் 'ஒத்த செருப்பு சைஸ் 7' இல்லாத போது, பார்த்திபன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் 'ஒத்த செருப்பு'. செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் பார்த்திபனை வெகுவாகப் பாராட்டினார்கள்.
மேலும், இந்தப் படத்துக்காக பல்வேறு விருதுகளையும் வென்று வருகிறார் பார்த்திபன். இதனிடையே இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கு 'ஒத்த செருப்பு' படம் பரிந்துரை செய்யவில்லை. 'கல்லி பாய்' பரிந்துரைக்கப்பட்டு, ஆஸ்கர் விருது பட்டியலிலிருந்தும் வெளியேறியுள்ளது.
இதனால், நேரடியாக ஆஸ்கர் விருதுக்கு 'ஒத்த செருப்பு' படத்தைக் கொண்டு சென்றார் பார்த்திபன். இதற்கான சிறப்பு திரையிடல் உள்ளிட்டவற்றிலும் கலந்து கொண்டார். இதனிடையே, நேற்றிரவு (ஜனவரி 13) ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் எந்தவொரு விருதிலும் 'ஒத்த செருப்பு' படம் இடம்பெறவில்லை.
இது தொடர்பாக பார்த்திபன், "நாம், ஆஸ்கர் விருது இறுதி பட்டியலில் இடம் பெறவில்லை என்றாலும், பெறுவோம் நாளை என்ற நம்பிக்கையுடன் இன்றைக் கடப்போம்" என்று தெரிவித்திருக்கிறார்