

'சர்வர் சுந்தரம்' படத்தின் தயாரிப்பு நிறுவனம், பட வெளியீட்டுக்கு உதவி புரிந்த சந்தானத்துக்கு நன்றி தெரிவித்துள்ளது.
பால்கி இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா, ராதாரவி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சர்வர் சுந்தரம்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்துமே 2016-ம் ஆண்டே முடிந்துவிட்டது.
ஆனால், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் சிக்கலால் பலமுறை இந்தப் படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஆண்டு 'தில்லுக்கு துட்டு 2' மற்றும் 'ஏ1' ஆகிய சந்தானம் படங்களுக்கு நல்ல வசூல் கிடைத்தது. இதனால், விநியோகஸ்தர்கள் சந்தானம் படத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இதனை முன்வைத்து 'சர்வர் சுந்தரம்' வெளியீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தயாரிப்பாளருக்கு சந்தானம் சில உதவிகள் செய்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, ஜனவரி 31-ம் தேதி 'சர்வர் சுந்தரம்' வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தானம் செய்த உதவிக்கு கெனன்யா பிலிம்ஸ் தனது ட்விட்டர் பதிவில், "இறைவனுக்கு, நண்பர்களுக்கு, குடும்பத்துக்கு மற்றும் நல விரும்பிகளுக்கு... நாங்கள் 'சர்வர் சுந்தரம்' படத்தை வெளியிடுகிறோம். படம் அனைவருக்குமான விருந்தாக இருக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். பொறுமையாக எங்களுக்கு உதவிய, எங்கள் மீது நம்பிக்கை வைத்த சந்தானத்துக்கு நன்றிகள்" என்று தெரிவித்துள்ளது.