

'மூக்குத்தி அம்மன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மூக்குத்தி அம்மன்'. இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது. நயன்தாரா, ஆர்.ஜே. பாலாஜி, மெளலி, ஊர்வசி உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது.
தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு க்ரிஷ் இசையமைத்து வருகிறார். தற்போது இதன் 90% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக ஆர்.ஜே.பாலாஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஆர்.ஜே. பாலாஜி தனது ட்விட்டர் பதிவில், "இந்த ஷெட்யூல் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
44 நாட்கள் 'மூக்குத்தி அம்மன்' படப்பிடிப்பு நடத்தினோம். இதில் சுமார் 90% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. கடவுளுக்கும், கன்னியாகுமரி மக்களுக்கும் நன்றி. எனது குழுவினர் மற்றும் நயன்தாராவின் ஒத்துழைப்புக்கு நன்றி. கோடைக்கு வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
அடுத்தகட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. 'எல்.கே.ஜி' படத்தைப் போலவே இந்தப் படத்துக்கும் வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தத் திட்டமிட்டுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி